Madurai : மதுரையில் வில்லங்கம்.. நம்பிக்கை துரோகம் செய்த நண்பன்.. சிறுவனை கடத்தியவர்களை தட்டி தூக்கிய போலீஸ்

Kidnapped Boy Rescued Madurai City Police : காதல் ஜோடி ஒன்றின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட கும்பல், இளம்பெண்ணின் உறவினரான சிறுவனையும் கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தில், 5 பேரை போலீசார் கைதும் செய்துள்ளனர்.

Aug 1, 2024 - 11:48
Aug 2, 2024 - 10:20
 0
Madurai : மதுரையில் வில்லங்கம்.. நம்பிக்கை துரோகம் செய்த நண்பன்.. சிறுவனை கடத்தியவர்களை தட்டி தூக்கிய போலீஸ்
Kidnapped Boy Rescued Madurai City Police

Kidnapped Boy Rescued Madurai City Police : மதுரையில் சிறுவனை கடத்திக்கொண்டு போய் 2 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்காக காரணத்தை கேட்டால் சினிமாவிற்கோ, வெப் சீரிஸ்கோ திரைக்கதையே எழுதலாம். என்னதான் நடந்தது தூங்கா நகரமான மதுரையில் வில்லங்க விவகாரம் குறித்து பார்க்கலாம்.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் முதுநிலை படித்து வரும் கல்லூரி மாணவர் நாக பிரவீன், அவர் கல்லூரிக்கு சென்று வரும்போது சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை ஆகி உள்ளது. இதையடுத்து தன்னிடம் வாக்குவாதம் செய்தவர்களை மிரட்ட வேண்டும் என்று, தனது நண்பரான விளாங்குடியை சேர்ந்த மணிமாறனிடம் கேட்டுள்ளார். அப்போது ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சிவமணி என்பவரை, நாக பிரவீனுக்கு அறிமுகம் செய்து வைத்த மணிமாறன், சிவமணி மூலம் மிரட்டலாம் என்று கூறி பேசி முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பிரவீனுக்கும் அவருடன் வாக்குவாதம் செய்தவர்களுக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அமைதியான நிலையில், பிரவீனைத் தொடர்பு கொண்ட,  மணிமாறனும், சிவமணியும் பிரச்னை என்ன ஆனது விசாரித்திருக்கிறார்கள். அப்போது சமாதானமான தகவலை பிரவீன் கூறவே, எங்களிடம் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டு நீங்களாக எப்படி சமாதானம் ஆகலாம் என்று கூறியதோடு, 2 லட்சம் ரூபாய் தங்களுக்கு தரவேண்டும் என்று கூறி, பிரவீனின் செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என்று பிரவீன் கெஞ்ச, கடன் வாங்கியாவது கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். மேலும் பிரவீன் தனது காதலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை செல்போனில் இருந்து எடுத்துள்ளதாகவும், அதனை இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.
இந்த மிரட்டல் குறித்து, பிரவீன் தனது காதலியிடமும் தெரிவித்த நிலையில், திடீரென இன்ஸ்டாகிராமில் காதல் ஜோடியின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து இளம்பெண் தனது உறவினர்களிடம் கூறவே, அவர்கள் நேரடியாகச் சென்று மிரட்டலில் ஈடுபட்ட மணிமாறனின் செல்போனை வாங்கி சோதனையிட்டனர். அப்போது, அவரது செல்போனில் இருந்து புகைப்படம் பதிவேற்றப்படவில்லை என்பது தெரிந்தது.இதனைத் தொடர்ந்து, மணிமாறனின் தாயார் கவிதா, தனது மகனின் செல்போனை கொண்டுவந்து தாருங்கள். சமாதானமாகப் பேசிக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி இளம்பெண்ணின் உறவினர்கள், விளாங்குடி வருமானவரி காலனி பகுதிக்கு செல்போனை ஒப்படைக்க சென்றுள்ளனர். 

அப்போது திடீரென மணிமாறன், சிவமணி மற்றும் நண்பரான ரமேஷ் ஆகியோர் அடங்கிய கும்பல் இளம்பெண்ணின் உறவினரான சிறுவன் ஒருவனை தாக்கியதோடு ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து கூடல் நகர் காவல்நிலையத்தில்,புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சிறுவனை கடத்தி வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர். 

தனக்கன்குளம் பகுதிக்கு சென்ற போலீசார், பணம்கேட்டு மிரட்டி கடத்தலில் ஈடுபட்ட சிவமணி, மணிமாறன், மணிமாறனின் தாயார் கவிதா, ரமேஷ், விக்கி (எ) விக்னேஸ்வரன் ஆகிய 5 பேரையும் விரட்டிபிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow