கிருஷ்ண ஜெயந்தி .. அரக்கர்களை அழித்த அவதார புருஷன்.. குட்டிக்கண்ணன் அவதாரம் எதற்கு தெரியுமா?

பூமியில் அதர்மம் தலை தூக்கும் போது மகாவிஷ்ணு அவதாரம் எடுக்கிறார். அரக்கர்களை அழிக்கவே அவதரித்தவர் கண்ணன். கம்சனை அழிக்கும் முன்பாக தன்னை அழிக்க பல வேடங்களில் வந்த அரக்கர்களை வதம் செய்திருக்கிறார்.

Aug 20, 2024 - 07:01
 0
கிருஷ்ண ஜெயந்தி .. அரக்கர்களை அழித்த அவதார புருஷன்.. குட்டிக்கண்ணன் அவதாரம் எதற்கு தெரியுமா?
sri krishna jayanthi


சென்னை: ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நல்ல நாளில் நள்ளிரவில் அவதரித்தவர் கண்ணன். பகவான் கிருஷ்ணரின் அவதாரம் கம்சனை வதம் செய்வதற்காக மட்டுமல்ல. நரகாசுரனை வதம் செய்வது மட்டும் நோக்கமல்ல. மண்ணுலக மக்களை காத்து ரட்சிக்கவும் அவரது அவதாரம் நிகழ்ந்துள்ளது. பிறந்த குழந்தையாக இருந்தது முதல் பால பருவத்திலேயே பல அசுரர்களை வதம் செய்திருக்கிறார் கிருஷ்ணர். கண்ணன் பிறந்த நாள் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அசுர வதம் பற்றி அறிந்து கொள்வோம். 

வாசுதேவர் தேவகி மைந்தன்:

கம்சன் என்ற அரக்கன் மதுராவை ஆண்டு வந்தான். கம்சனின் தங்கையான தேவகிக்கும் வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. தங்கையையும் தங்கை கணவரையும் ரதத்தில் வைத்து அழைத்து சென்ற போது  வானுலகில் இருந்து வந்த ஒரு தெய்வீக குரல், தேவகியின் எட்டாவது மகன் கம்சனை அழிப்பான் என கூறியது. இதை கேட்டு பயந்து போன கம்சன், தன் தங்கையைக் கொல்ல தன் வாளை உடனடியாக எடுத்தான். குறுக்கிட்ட வாசுதேவன், தன் மனைவியை விட்டு விடுமாறு வணங்கினான். தங்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் ஒப்படித்து விடுவதாக வாக்கும் அளித்தான். தேவகியின் எட்டாவது மகனின் கையால் தன் மரணம் நிகழும் என்று கணித்த தீர்க்கதரிசனத்தை எண்ணி பயந்த கம்சன், தேவகியையும் அவளது கணவனான வாசுதேவனையும் சிறையில் அடைத்தான். தேவகிக்கும் வாசுதேவனுக்கும் பிறந்த எட்டாவது மகன் தான் ஸ்ரீ கிருஷ்ணர். அவர்களின் முதல் ஆறு குழந்தைகளை கம்சன் கொன்ற பிறகு, ஏழாவதாக கருவுற்ற குழந்தை கருச்சிதைவில் இறந்தது. அதை ஏற்படுத்தியவரே கண்ணன்தான். தேவகியின் கருவில் இருந்த குழந்தையை ரோகிணி மாற்றி வைத்து நந்தகோபரின் வீட்டில் மறைத்து வைத்தார். அங்கே பலராமர் பிறந்தார். எட்டாவதாக பிறந்தவர் தான் கிருஷ்ணர். 

எட்டாவது குழந்தை அவதாரம்: 

குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அக்குழந்தையின் தலைவிதியை எண்ணி தேவகியும் வாசுதேவனும் கலங்கினர் அப்போது திடீரென அவர்கள் முன் தோன்றிய விஷ்ணு பகவான், அவர்களையும் மதுராவின் மக்களையும் காப்பாற்ற தானே அவதாரம் எடுத்து வரப்போவதாக கூறினார். தான் பிறந்தவுடன் அவரை எடுத்துக் கொண்டு, கோகுலத்தில் உள்ள தன் நண்பனான நந்தகோபரிடம் ஒப்படைக்குமாறு வாசுதேவனிடம் கூறினார். நந்த கோபரின் மனைவியான யசோதா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுப்பார் என்றும் அந்த குழந்தைக்கு பதிலாக தன்னை  மாற்றி வைத்து விட்டு, யசோதாவின் பெண் குழந்தையை சிறைக்கு வாசுதேவர் எடுத்து கொண்டு வர வேண்டும் என்றார் விஷ்ணு.

மாய கண்ணன் அவதாரம்:

ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில்  நள்ளிரவில் அவதரித்தார் கண்ணன்.  வசுதேவர் தன் கால்களை அசைத்தவுடன் கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலி அவிழ்ந்தது. சிறைச்சாலை கதவுகளும் திறந்தன. கிருஷ்ணரை தன்னுடன் எடுத்துக் கொண்டு யமுனா நதியை கடந்தார். மழை வெள்ளம் பெருக்கெடுத்தது வாசுதேவர் தன் குழந்தையை தன் தலைக்கு மேல் வைத்துக் கொண்டார். பெருக்கெடுத்த வெள்ளம் விலகி பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது . அதிசயமாக ஐந்து தலை நாகம் வாசுதேவரை பின் தொடர்ந்து, குழந்தைக்கு நிழல் போல் வந்து கொண்டிருந்தது.

யோக மாயா சாபம்:

வாசுதேவர் கோகுலத்தை அடைந்ததும், நந்தகோபரின் வீட்டு கதவுகள் திறந்திருப்பதைக் கண்டார். மெதுவாக குழந்தைகளை மாற்றினார். பின் அந்த பெண் குழந்தையுடன் மீண்டும் கம்சனின் சிறைச்சாலைக்கு சென்றார். சிறைச்சாலைக்குள் நுழைந்தவுடன் அதன் கதவுகள் தானாக மூடிக்கொண்டன. அப்போது விழித்துக் கொண்ட காவலாளிகள், பெண் குழந்தை பிறந்துள்ளது என உணர்ந்து கொண்டார்கள். குழந்தை பிறப்பைக் பற்றி கம்சன் அறிந்த போது, சிறைச்சாலைக்குள் விரைந்தான். அந்த குழந்தையை ஒரு கல்லின் மீது தூக்கி எறிந்தான். ஆனால் இம்முறை அவன் கையில் இருந்து நழுவிய அக்குழந்தை வானை சென்றடைந்தது. காற்றில் எழுந்த அவள், விஷ்ணு பகவானின் உதவியாளரான யோகமாயாவாக உருமாறினாள். கம்சனை பார்த்து "ஏ முட்டாளே! என்னை கொல்வதால் உனக்கு என்ன கிடைக்கும்? உன் எதிரி ஏற்கனவே பிறந்து விட்டான் பத்திரமாக வளர்ந்து கொண்டிருக்கிறான் காலம் வரும்போது உன்னைக் கொல்வான்  என யோகமாயா கூறவே கம்சன் கோபமடைந்தான்.

மார்பில் விஷம் தடவிய அரக்கன் புட்டனா:

தன்னை அழிக்கப் பிறந்த குழந்தை எதிரியை எப்படியாவது அழிக்க வேண்டும் என கம்சன் நினைத்தான். அதற்காக புட்டனா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். தேவகி கிருஷ்ணரை பெற்றெடுத்த அதே நாளில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் அவன் கொல்ல சொன்னான். அதனால் அழகிய பெண்ணாக வேடமணிந்த அந்த அரக்கன் தன் மார்பகங்களில் விஷத்தை தடவிக் கொண்டான். அந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் பாலூட்ட பறந்து வந்து நோட்டமிட்டான். நந்த கோபரின் வீட்டிற்கு வந்த அந்த அரக்கன், தன் குழந்தையை தன்னிடம் காட்டுமாறு யசோதையிடம் கேட்டான். குழந்தை கிருஷ்ணரை தன் மடியில் போட்ட புட்டனா தன் மார்பக காம்புகளை குழந்தையின் வாயில் திணித்தான். கண்களை மூடிக்கொண்ட கிருஷ்ணர், விஷத்தை உறிஞ்சாமல், அவனின் மூச்சு காற்றை உறிஞ்சி, அவனை கொன்றார்.


வண்டியாக வந்த அரக்கன்:

புட்டனாவின் மரணத்தை கேள்விப்பட்ட கம்சன் அதிர்ந்தான். அதனால் ஷகாட்சுரா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான். ஒரு வண்டி போல் வேடமணிந்து கொண்ட அவன் கோகுலத்தை அடைந்தான். கிருஷ்ணருக்கு மூன்று மாதங்கள் ஆகியிருந்த போது, அந்த நிகழ்வை கொண்டாட, யசோதா ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாள். மாடுகளை மேய்க்கும் அனைத்து பெண்களும் அவள் வீட்டு முன்பு கூடி, பண்டிகை பாடல்களை பாடினார்கள். விருந்தாளிகளை வரவேற்பதில் யசோதா சுறுசுறுப்பாக இருந்தாள். கிருஷ்ணாவின் பாதுகாப்பான மற்றும் நீண்ட ஆயுளுக்கு அவள் பல புனித சடங்குகளையும் மேற்கொண்டார். மர வண்டியின் அடியில் படுத்திருந்த குழந்தை கிருஷ்ணரைப் பற்றி கவனிக்க மறந்தாள் யசோதா.  ஷகாட்சுரா அரசன் குட்டி கிருஷ்ணரின் மேல் வண்டியை ஏற்றி நசுக்கிக் கொல்ல நினைத்தான். பசியெடுத்த கிருஷ்ணர் அழத் தொடங்கினார். இதனை கண்டு கொள்ளாமல் யசோதா இருந்ததால், கிருஷ்ணர் அந்த வண்டியின் சக்கரத்தை உதைத்தார். மிகப்பெரிய சத்தத்துடன் அந்த வண்டி உடைந்தது. குழந்தை கிருஷ்ணர் அழுது கொண்டிருந்தார். குழந்தையை உடனடியாக தூக்கிய யசோதா, அவனை கட்டிபிடித்து, பாலூட்ட தொடங்கினார். 

உலகத்தை காட்டிய கண்ணன்:

கிருஷ்ணரின் மூத்த சகோதரரான பலராமன், கிருஷ்ணர் மண்ணை உண்ணுகிறார் என தன் தாய் யசோதாவிடம் புகார் கூறினான். மிகுந்த ஆர்வமடைந்த யசோதா, கிருஷ்ணரின் வாயை திறக்க சொன்னாள். தான் பார்த்த காட்சியை கண்டு யாசோதா வியந்தே போனாள். கிருஷ்ணரின் வாயில் அவள் மொத்த அண்டத்தையே கண்டாள். சூரியன், சந்திரன், அனைத்து நட்சத்திரங்கள், வானம், மலைகள், ஆறுகள், தீவுகள், பெருங்கடல்கள், அனைத்து உயிர் வாழும் ஜீவராசிகள் மற்றும் உயிர் வாழாத பொருட்களைக் கண்டாள்.

வெண்ணெய் திருடிய கிருஷ்ணா:

கிருஷ்ணர் வளரும் போது அவருடன் சேர்ந்து அவருடைய குறும்பும் வளர்ந்து கொண்டே வந்தது. பால் மற்றும் வெண்ணெய்யின் மீது அவருக்கு இருந்த காதல் பற்றிப் பல கதைகள் உள்ளது. பால் கார பெண்கள் வயலை கடக்கையில், கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் கற்களை அவர்களின் பானையின் மீது எரிந்து பானையை உடைத்து விடுவார்கள்.

தேவர்களுக்கு சாப விமோசனம்:

கிருஷ்ணருக்கு பால் பொருகளின் மீதிருந்த காதலால், வெண்ணெய் ஜாடிகளை ஒன்றாக கட்டி, உத்திரத்தில் தொங்க விட்டிருந்தாள் யசோதா. அதனால் அவை கிருஷ்ணரின் கைகளுக்கு எட்டாமல் இருந்தது. அதையும் மீறி வெண்ணெய் திருடி சாப்பிடுவார் குட்டிக்கண்ணன். மிகவும் கோபமடைந்த யசோதா,  ஒரு கயிற்றில் கிருஷ்ணரை கட்ட முயன்றாள். ஆனால் ஒவ்வொரு முடிச்சை போடும் போதும், அந்த கயிறு மிகவும் குட்டையாவதை அவள் கவனித்தாள். அவளைப் பார்த்து சிரித்த கிருஷ்ணர் தானே முடிச்சுகளை போட்டார். அதனால் அவரை அரவை கருவியில் சேர்த்து கட்டி வைத்தார். தவழ முயற்சித்த கிருஷ்ணர், முற்றத்தில் இருந்த இரண்டு அர்ஜுன மரங்களுக்கு இடையே மாட்டி கொண்டார். கீழே விழுந்த அந்த மரங்கள் தேவர்களாக உருமாறி, கிருஷ்ணரை வணங்கினார்கள். நாரதரின் சாபத்தால் 100 வருடங்கள் இப்படி மரமாக நின்றிருந்த அவர்களை கிருஷ்ணர் விடுவித்தார்.

கம்சனை கொன்ற கண்ணன்

இப்படி தான் குழந்தையாக இருந்த போதே பல்வேறு லீலைகளை செய்து தன்னை அழிக்க வந்த அரக்கர்களை கொன்ற கண்ணன் கடைசியாக தனது தாய் மாமன் கம்சனையும் வதம் செய்து அழித்தார். கண்ணனின் பிறப்பு அசுர வதத்திற்காக மட்டும் நிகழ்ந்ததல்ல. மக்களை காப்பதற்காகவும்தான். போர்க்களத்தில் பகவத் கீதையை போதித்து மண்ணுலக மக்களை ரட்சிக்க வந்தவ கண்ணன் இன்றைக்கும் பல வீடுகளில் குட்டிக்கண்ணனாக வலம் வருகிறார். பகவான் கண்ணனை போற்றும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருப்போம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow