“திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” - சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Oct 21, 2024 - 22:15
 0
“திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” - சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!
“திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” - சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இச்சம்பவம் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கிவிடுவேன்” என்ற சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் சீமானின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,  “தமிழ்த் தாய் வாழ்த்தை எடுத்துவிடுவேன் என்று அவர் (சீமான்) சொல்லவில்லை. அதற்கு பதிலாக இன்னும் சிறப்பான ஒரு தமிழ்த் தாய் வாழ்த்தை நான் நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது. அதனால் இந்த கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

திராவிடம் என்பது மரபினம். தமிழர் என்பது தேசிய இனம். மரபினத்துக்குள்ளேயே இருக்கிற பல்வேறு தேசிய இனங்களில் ஒன்று தமிழினம். அவ்வளவுதான். இதனை நாம் வெவ்வேறாகப் பிரிக்கத் தேவை இல்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே, திராவிடம் என்றால் தமிழ்தான்; திராவிட நாடு என்றால் தமிழ்நாடுதான்; திராவிடத்தைப் பாதுகாப்போம் என்றால் தமிழைப் பாதுகாப்போம்; தமிழர்களைப் பாதுகாப்போம் என்றுதான் பொருள் என கவிதைகளையும் பாடி இருக்கிறார்.

எனவே, அந்தக் காலச் சூழலில் மாநிலங்கள் பிரிக்காத காலத்தில், மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படாத அந்தக் காலத்தில், மதராஸ் மாகாணம் என்ற போது திராவிட மொழிகள் என்ற அடிப்படையில் தென்னிந்திய மொழிகள் எல்லாம் அடையாளம் கண்டு இந்த பகுதியை திராவிட நிலம் என்று நம்முடைய முன்னோர்கள் அறிந்திருந்தனர். அதைவிட ஆரியத்துக்கு எதிரான கோட்பாடு திராவிடம்தான் என்பது பண்டிதர் அயோத்திதாசர் முன்மொழிந்த கோட்பாடு. பெரியாருக்கும் திராவிட கட்சிகளுக்கும் முன்னரே, திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். ஆகவே இதை நாம் குழப்பிக் கொள்ள தேவை இல்லை. திராவிடர்கள் என்பது மரபினம்; தமிழர்கள் என்பது தேசிய இனம்” எனக் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow