Atishi Marlena : பரதனைப் போல டெல்லியை ஆட்சி செய்வேன்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்ட முதல்வர் அதிஷி

Delhi CM Atishi Marlena : ராமாயணத்தில் பரதன் அயோத்தியை 14 ஆண்டுகள் ஸ்ரீராமரின் பாதுகையை வைத்து அரசாண்டது போல நானும் டெல்லி முதல்வராக ஆட்சி செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார் அதிஷி.

Sep 23, 2024 - 14:39
Sep 23, 2024 - 15:24
 0
Atishi Marlena : பரதனைப் போல டெல்லியை ஆட்சி செய்வேன்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்ட முதல்வர் அதிஷி
delhi cm athisi post bharat ruled ayodhya

Delhi CM Atishi Marlena : டெல்லி மாநில முதல்வர் அதிஷி சனிக்கிழமை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிலையில் இன்று  அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். முதல்வர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். பரதன் அரசாண்டது போல 4 மாதங்கள் நான் டெல்லியை ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார் அதிஷி.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 13ஆம் தேதி ஜாமினில் விடுதலையானார். இதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.புதிய முதல்வராக அதிஷியை ஆம் ஆத்மி கட்சியினர் தேர்வு செய்தனர். 

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை டெல்லி முதல்வராக அதிஷி சிங் மர்லேனா பதவியேற்றார். டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது. அவருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 23) காலை அதிஷி டெல்லி முதல்வர் அலுவலகத்திற்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நாற்காலியை காலியாக விட்டுவிட்டு அதற்கு பக்கத்தில் வேறொரு நாற்காலியில் அவர் அமர்ந்தார். அது பலரது கவனத்தை பெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அதிஷி,“ராமாயணத்தில் பரதருக்கு ஏற்பட்ட அதே நிலைதான் இன்று எனக்கு நேர்ந்துள்ளது. அவரது சுமையை போல நானும் முதல்வர் பதவியை சுமக்கிறேன். எப்படி ராமரின் பாதுகையை  தனது அரியணையில் வைத்து 14 ஆண்டுகள் பரதன் ஆட்சி செய்தாரோ, அதே உணர்வோடு அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லியை ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார் அதிஷி. இதனை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அதிஷி.

தமிழ்நாட்டில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2001 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மே மாதம் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார்.

இதனை எதிர்த்து எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே, சிறைத் தண்டனை அளிக்கப்பட்ட ஜெயலலிதா பதவி ஏற்றது செல்லாது என 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பொது ஊழியராக இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து ஜெயலலிதா பதவி விலகினார். இதற்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் முதன்முறையாக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டாலும் ஜெயலலிதா அமர்ந்த முதல்வர் நாற்காலியில் அமராமல் வேறொரு நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தார். வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி முதல்வர் பதவியேற்கும் வரை அந்த நாற்காலி காலியாகவே இருந்தது.

ஓ.பன்னீர் செல்வம் 3 முறை முதல்வர் பதவியில் அமர்ந்த போதும் அவர் ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமரவில்லை.தன்னை பரதன் என்றே கூறிக்கொள்வார் ஓ.பன்னீர் செல்வம். தற்போது டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அதிஷியும் ராமாயண இதிகாசத்தை நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow