Chennai Day 2024 : சென்னை 385.. ஹேப்பி பெர்த்டே மெட்ராஸ்.. வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் அடையாளம்!

Chennai Day 2024 : சென்னைப்பட்டணம் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு மெட்ராஸ் ஆக மாறி பின்னர் மீண்டும் சென்னையாக மாறியது. பெயர் மாறினாலும் மனிதர்கள் மாறுவதில்லை. பாசமும் நேசமும் மாறுவதில்லை.

Aug 22, 2024 - 05:45
Aug 22, 2024 - 10:14
 0
Chennai Day 2024 : சென்னை 385.. ஹேப்பி பெர்த்டே மெட்ராஸ்.. வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் அடையாளம்!
Chennai Day 2024

Chennai Day 2024 : இன்றைக்கு 385வது பிறந்த தினம் கொண்டாடும் சென்னை பெருநகரம் பல்வேறு சிறப்புகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு யார் வந்தாலும் சிறப்போடு வாழ வைக்கும். பிழைப்புத் தேடி வருவோரை, மொழி, மதம் என எந்தவித வேறுபாடுமின்றி அரவணைக்கிறது சென்னை பெருநகரத்தின் சுவாரஸ்ய பக்கங்களைப் பார்க்கலாம். 

சென்னைப் பட்டினம் 1639ம் ஆண்டு உருவானது. 385 ஆண்டுகளில் சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சாதித்துள்ளது. எத்தனையோ இயற்கை இடர்பாடுகளை சந்தித்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு விடும் சென்னை மாநகரம். சுனாமியோ, பெருவெள்ளமோ, புயல் மழையோ எதையும் சமாளித்து விடுவார்கள் சென்னை மாநகர மக்கள். இன்று சென்னைக்கு 385வது பிறந்த நாள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தியாவின் முதல் மாநகராட்சி என்கிற கெளரவத்தோடு பிற மாநில மக்களால் அறியப்படும் நாட்டின் 5ஆவது பெரு நகரம் சென்னை.  ஒரு கோடிக்கும் மேல் சென்னையில் வசிக்கின்றனர். இன்றைய கிரேட்டர் சென்னை, 385 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டணம் என்பதில் இருந்து தொடங்கியது. மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிராக, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர், தங்களுக்காக கோட்டை, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புக்காக வாங்கிய மணல் திட்டுதான், 1639ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 22) சென்னை பட்டணம் என்ற பெயரில் கையெழுத்தானது. அன்றைய தினத்தை அடையாளமாக வைத்து சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. 

வட சென்னையோ, தென் சென்னையோ மத்திய சென்னையோ எந்த பகுதி என்றாலும் அங்குள்ள மக்களின் பாசமும் நேசமும் ஒன்றுதான். வந்தரை வாழ வைக்கும் சென்னை பெருநகரத்தில் பல ஊர்களைச் சேர்ந்த மக்கள் வசிப்பதால் பல வித உணவுகளையும் இங்கே ருசிக்கலாம்.

385வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னையில் கடற்கரை விற்பனை செய்யப்படும் பட்டாணி சுண்டல், சாட் உணவுகள், ருசியான பஜ்ஜிகளை சாப்பிட்டே பலரது வயிறு நிரம்பி விடும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழாவின் போது மாட வீதிகளில் தமிழக கிராமங்களில் கிடைக்கும் கமர்கட் முதல் ரவா லட்டு வரைக்கும் விற்பனை செய்யப்படுவது கூடுதல் சிறப்பு.

சென்னை பெருநகரமாக இருந்தாலும் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களை மிஞ்சிய கொண்டாட்டங்கள் களைகட்டும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் 63 திருவிழா என்றாலும், மாசி மகா சிவராத்திரி அமாவாசை நாளில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா என்றாலும் மெய் சிலிர்க்கும் வகையில் கொண்டாட்டங்கள் களை கட்டும். 

ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில் கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. சென்னைவாசிகளின் காவல்தெய்வமாக காத்து நிற்கும் கோலவிழி அம்மனும், மயிலை முண்டகக்கண்ணி அம்மனும், காளிகாம்பாள் ஆலயமும் ஆடியில் மட்டுமல்லாது அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மக்கள் சென்று வணங்கும் கோவிலாகவே உள்ளது. பால்குடம் எடுப்பது தொடங்கி பூக்குழி இறங்குவது வரைக்கும் சென்னையில் திருவிழாக்கள் குறைவில்லாது நடைபெறும். 

385வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னை தினம் தினம் வரும் மக்களின் வருகையால் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.  ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, தமிழ்நாட்டுக்கே தலைநகரமாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னையின் அடையாளங்களில் ஒன்று. இங்கு கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டடத்திலும், சென்னையில் வசித்த பூர்வக்குடி மக்களின் உழைப்பும் கலந்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow