உலகம்

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி

நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி
Nepal Interim Prime Minister Sushila karki
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஜென் Z இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதால் பிரதமர் இல்லம், நாடாளுமன்ற வளாகம், அரசு கட்டடங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய அரசு கவிழ்ந்தது.

புதிய அரசு அமையும் வரை, இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையே, போராட்டத்தில் போலீஸார் சுட்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. 191 பேர் காயமடைந்துள்ளனர்.

இடைக்காலப் பிரதமரின் முக்கியப் பேச்சு

பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா கார்கி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு முன்னதாக, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நானும் எனது குழுவினரும் இங்கு அதிகாரத்தை ருசிக்க வரவில்லை. புதிய அரசு அமைந்ததும் நாடாளுமன்றத்திடமும், அமைச்சர்களிடமும் அதிகாரத்தை ஒப்படைத்துவிடுவோம். உங்கள் ஆதரவு இல்லாமல் வெற்றிபெற முடியாது.

ஊழலை முடிவுக்குக் கொண்டு வர மாணவர்கள் நடத்திய போராட்டம் பாராட்டுக்குரியது. சிறந்த நிர்வாகம் மற்றும் பொருளாதார சமநிலை என்பது அவர்களின் விருப்பம். அதற்கேற்பவே இந்த நிர்வாகம் செயல்படும்" என்றார்.

உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு

போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் (இந்திய மதிப்பில்) நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்த சுசீலா கார்கி, இறந்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களை தியாகிகளாக அறிவிப்பதாகத் தெரிவித்தார்.