சினிமா

'தூங்கி எழுந்து பார்த்தா நாங்க குற்றவாளியா?'- 'தண்டகாரண்யம்' ட்ரெய்லர் வெளியீடு!

அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தண்டகாரண்யம்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

'தூங்கி எழுந்து பார்த்தா நாங்க குற்றவாளியா?'- 'தண்டகாரண்யம்' ட்ரெய்லர் வெளியீடு!
Thandakaaranyam movie trailer released
பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தண்டகாரண்யம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு விமர்சன ரீதியாகப் வரவேற்பைப் பெற்ற ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் அதியன் ஆதிரை மீண்டும் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் உடன் இணைந்துள்ளார். ‘தண்டகாரண்யம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படக்குழு விவரம்

இப்படத்தில் தினேஷுடன் இணைந்து நடிகர் கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், உமாதேவி, அறிவு, தனிகொடி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

ட்ரெய்லர் வெளியீடு

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும், ‘காவ காடே’ எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, 'தூங்கி எழுந்து பார்த்தா நாங்க குற்றவாளியா?' என்று வசனம் கவனம் பெற்றுள்ளது. கடுமையான அதிகார மோதல்கள், பழங்குடியின மக்களின் வாழ்வியல் எனப் பல ஆழமான விஷயங்களை இப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.