தமிழ்நாடு

“தவெக ஆட்சிக்கு வருவதே மக்கள் நலனுக்காக தான்”- கோவையில் விஜய் பேச்சு

மனதில் நேர்மையும் கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது என விஜய் பேச்சு

 “தவெக ஆட்சிக்கு வருவதே மக்கள் நலனுக்காக தான்”- கோவையில் விஜய் பேச்சு
விஜய்க்கு உற்சாக வரவேற்பு

கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் தலைமையில் தற்பொழுது தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.முன்னதாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த விஜய்க்கு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் அதிகளவில் கூட்டம் கூடியதால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற விஜய்யை ஏராளமானோர் பின் தொடர்ந்து சென்றனர். இதனால் திறந்த வாகனத்தில் விஜய் சென்றார். அப்போது சில தொண்டர்கள் வாகனத்தின் மீது ஏறி அலப்பறையில் ஈடுபட்டனர். அவர்களை விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். பின்னர் ஓட்டலில் சில மணி நேரம் தங்கிய விஜய், காரில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டார். இதனால் விஜய் வாகனத்தை சூழ்ந்துக்கொண்டு தவெக தொண்டர்கள் பின் தொடர்ந்தனர். இதன்காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேடையில் இருந்து இறங்கிய விஜய்

இதையடுத்து பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் கல்லூரி வளாகத்திற்குள் விஜய் சென்றார். விஜய்யை கண்ட தொண்டர்கள் தளபதி....தளபதி...தலைவா...என கோஷங்களை எழுப்பினர். பின்னர் மேடையேறிய விஜய் அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பின்னர் தவெகவின் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பூத் கமிட்டி கூட்டத்தில் மின்சார வயர் உள்ள பகுதியில் தொண்டர்கள் கூடியதால் விபரீதம் ஏற்படாமல் இருக்க கூட்டத்தை மற்றொரு பக்கம் செல்லுமாறு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தினார்.

ஆனால் கூட்டம் களைந்து செல்வதாக இல்லாத நிலையில், மைக்க வாங்கி விஜய், பாதுகாப்பு காரணங்களுக்கு அங்குள்ளவர்கள் வேறு பக்கம் போகுமாறு கூறினார். ஒரு கட்டத்திற்கு மேல் புஸ்ஸி ஆன்ந்த் பதறியடித்துக்கொண்டு அந்த பகுதிக்கு சென்ற நிலையில், உடனே தவெக தலைவர் விஜய்யும், மற்ற நிர்வாகிகளும் கூட்டம் அதிகளவில் இருந்த இடத்திற்கு சென்று கூட்டத்தை களைந்து போகுமாறு கூறினர்.


ஓட்டுக்காக நடைபெறுவது அல்ல

பின்னர் மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி, ஆனந்த், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசினர். இதைத்தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், "கோவை என்றாலும், கொங்கு பகுதி என்றாலும் இந்த மண் மற்றும் மக்களின் மரியாதை தான் ஞாபகத்திற்கு வரும் என கூறி பேச தொடங்கினார். பூத் லெவல் ஏஜென்ட் பயிற்சி பட்டறை, பேரு தான் பயிற்சி பட்டறை. ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால் வேறு ஏதோ விழா நடப்பது போன்று இருக்கிறது. பூத் கமிட்டி கூட்டம் என்றால் அது ஓட்டுக்காக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ஆனால் இது ஓட்டுக்காக நடக்கக்கூடிய விஷயம் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரம் என்றாலே அது ஓட்டு சம்பந்தப்பட்டது தான், ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப் போகிறோம் என்பதை பேசக்கூடிய கூட்டம் தான் இது. இதுவரை இருக்கக்கூடியவர்கள் செய்ததை நாம் செய்யக்கூடாது.

நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பதே மக்களின் நலனுக்காக மட்டும்தான். இந்த பூத் லெவல் ஏஜென்ட் கூட்டத்தில் மக்களிடமிருந்து நாம் எப்படி ஓட்டுக்களை வாங்க போகிறோம் என்பதை பற்றி மட்டுமே பேச போகும் கூட்டம் கிடையாது. அதையும் தாண்டி மக்களுடன் நாம் எப்படி ஒன்றிணைந்து இருக்கப் போகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம், அதைப்பற்றி பேசுவதற்காக மட்டுமே இந்த பயிற்சி பட்டறை. இதற்கு முன்னர் நிறைய பேர் வந்திருக்கலாம் சென்றிருக்கலாம் நிறைய பொய்களை கூறி இருக்கலாம் மக்களை ஏமாற்றி இருக்கலாம், இதெல்லாம் செய்து ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.

போர் வீரனுக்கு சமம்

இதெல்லாம் பழைய கதை.. அதையெல்லாம் செய்வதற்கு நான் இங்கு வரவில்லை. இனி ஒருபோதும் அவையெல்லாம் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். நம்முடைய கட்சியின் மேல் மக்களுக்கு நம்பிக்கையை கொண்டு வரப் போவதே, பூத் லெவல் ஏஜெண்டுகள் தான். இதில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் போர் வீரனுக்கு சமம். நாம் ஏன் வந்திருக்கிறோம். எதற்கு வந்திருக்கிறோம். எப்படிப்பட்ட ஆட்சியை வந்திருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நமக்கு மனசில் நேர்மை இருக்கிறது, கறை படியாத நேர்மை, உண்மை இருக்கிறது. அர்ப்பணிப்பு செயல்படும் திறன் உள்ளிட்டவையும் இருக்கிறது. களமும் இங்கு தயாராக இருக்கிறது. களக்குங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்..” என பேசினார்.