அரசியல்

வேக வேகமாக வந்த புஸ்ஸி ஆனந்த்...மேடையில் இருந்து இறங்கிய விஜய்...தவெக கூட்டத்தில் பரபரப்பு

தவெகவின் கொள்கைத்தலைவர்கள் படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

வேக வேகமாக வந்த புஸ்ஸி ஆனந்த்...மேடையில் இருந்து இறங்கிய விஜய்...தவெக கூட்டத்தில் பரபரப்பு

கோவைக்கு விஜய் வருகை

கோவை மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் தனியார் பொறியியல் கல்லூரியில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் தலைமையில் தற்பொழுது தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.இதையொட்டி காலை முதலே கோவை விமான நிலையம் மற்றும் சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி முன்பு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று காலை கோவை விமான நிலையத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து இருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மேளதாளம் முழங்க, ஜமாப் இசை ஏற்ற நடனமாடி உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனால் கோவை விமான நிலைய வளாகம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அங்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வருவதை கண்ட தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி விமான நிலையம் உள்ளே செல்ல முயன்றனர். அப்பொழுது விமான நிலையத்திற்குள் தடைகளை மீறி நுழைய முயன்ற தொண்டர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முடியாமல் அவர்கள் வைத்து இருந்த தடிகள் மற்றும் பைப்புகளை கொண்டு உள்ளே சென்று விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டினர்.

பாதுகாப்பு படையினர் திணறல்

மேலும் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தடுப்புகளை மீறி வர வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினர். விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்தனர். இருப்பினும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து சென்றது. இதனால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினரும் விமான நிலைய பாதுகாப்பு படையினரும் திணறினர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜயை கண்ட தொண்டர்கள் அடுத்த தமிழக முதல்வர், தலைவா என்ற கோஷங்களை எழுப்பினர்.இதையடுத்து சாலை இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள் கட்சி கொடிகள் உடன் கோஷங்களை எழுப்பியும் வரவேற்றனர். அப்பொழுது விஜய் ரோடு ஷா சென்ற பகுதியில் இருந்த ரசிகர்கள், தொண்டர்கள் அவரது வாகனத்தின் மீது ஏறி கைகளைக் கொடுத்தும், சால்வையை கழுத்தில் போட கூறியும் அலப்பறையில் ஈடுபட்டனர். அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தி கீழே இறக்கினர். அங்கு இருந்து அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுக்க சென்றார்.

நிர்வாகிகளுக்கு சலசலப்பு

இந்நிலையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெறும் கல்லூரி அருகே வந்த ஆசிரியர்கள் சிலர் வருகின்ற 2026ம் ஆண்டு தேர்தலில் தங்களது ஓட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு தான் என்று பதாகை ஏந்தி நின்று இருந்தனர்.அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சியினர் தங்களுக்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கவில்லை என்றும் இதனால் வருகின்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய்க்கு தான் தங்களது ஓட்டு என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் த.வெ.க தலைவர் விஜயை காண ரசிகர்கள் அங்கு உள்ள உயரமான தண்ணீர் தொட்டி மீது ஆபத்தை உணராமல் ஏறி நின்று கோஷங்களை எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். மேலும் அதே பகுதியில் சாலையில் கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் அப்பகுதியில் வீலிங் செய்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் கல்லூரிகளில் நடைபெறும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திற்கு 18 வயது நிரம்பாத சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், கட்சியினர் இடையே சலசலப்பு நிலவியது. கோவையில் கூடி உள்ள தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறை மற்றும் கட்சி நிர்வாகிகள் திகைத்து வருகின்றனர்.

அடையாள அட்டைகள் கிழிப்பு

மேலும் அப்பகுதியில் மாநாட்டிற்கு சென்ற நிர்வாகிகள் பாஸ் இருந்தால் மட்டுமே கேட்டில் செக்யூரிட்டி அனுமதி அளித்து வந்த நிலையில் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.முகவர்களுக்கான அடையாள அட்டை வழங்கி அவர்கள் கருத்தரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்களிடம் தொண்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாட்டிற்கு வந்திருந்த நிர்வாகிகளின் அடையாள அட்டை ஒட்டப்பட்டு இருந்த புகைப்படங்களை பாதுகாவலர் கிழித்ததால் நிர்வாகிகளுடன் பாதுகாவலருக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. தமிழக வெற்றிக்கழகம் நடத்திய கருத்தரங்கிற்கு வந்திருந்த நிர்வாகிகளுக்கு qr கோடு கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டன. சில நிர்வாகிகளுக்கு புகைப்படங்கள் இல்லாத அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டதால் அவர்கள் தங்கள் சொந்த புகைப்படங்களை அடையாள அட்டைகளில் ஒட்டினர். இதனை பார்த்த பாதுகாவலர்கள் அதை புகைப்படங்களை கிழித்து நிர்வாகிகளை வெளியேற்றினர். சேலம் மாநகர மாவட்ட தலைவர் வெற்றிக் கழகச் செயலாளரான பார்த்திபன் இதனை எதிர்த்து நிர்வாகிகள் வெளியே அனுப்புங்கள் என வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

அடுத்தடுத்து விபத்து

இதனைத் தொடர்ந்து பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கருப்பு நிற பார்ச்சூனர் காரில் நட்சத்திர விடுதியில் இருந்து நடிகர் விஜய் கிளம்பி கருத்தரங்க திடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வழியில் தேர்ந்தெடுத்த அவரது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் வாகனங்களை சூழ்ந்து கொண்டனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக ரசிகர்கள் சிலர் விஜயின் வாகனத்தை சேதப்படுத்தியதால் மாற்று வாகனத்தில் அவர் பயணத்தை தொடர்ந்தார். இந்நிலையில் அவரை பின் தொடர்ந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரசிகர்கள், தொண்டர்கள் பின்தொடர்ந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளானது.

இதையடுத்து கருத்தரங்க நடைபெறும் கல்லூரி வளாகத்திற்குள் விஜய் சென்றார். விஜய்யை கண்ட தொண்டர்கள் தளபதி....தளபதி...தலைவா...என கோஷங்களை எழுப்பினர். பின்னர் மேடையேறிய விஜய் அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பின்னர் தவெகவின் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பூத் கமிட்டி கூட்டத்தில் மின்சார வயர் உள்ள பகுதியில் தொண்டர்கள் கூடியதால் விபரீதம் ஏற்படாமல் இருக்க கூட்டத்தை மற்றொரு பக்கம் செல்லுமாறு புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தினார். ஆனால் கூட்டம் களைந்து செல்வதாக இல்லாத நிலையில், மைக்க வாங்கி விஜய், பாதுகாப்பு காரணங்களுக்கு அங்குள்ளவர்கள் வேறு பக்கம் போகுமாறு கூறினார். ஒரு கட்டத்திற்கு மேல் புஸ்ஸி ஆன்ந்த் பதறியடித்துக்கொண்டு அந்த பகுதிக்கு சென்ற நிலையில், உடனே தவெக தலைவர் விஜய்யும், மற்ற நிர்வாகிகளும் கூட்டம் அதிகளவில் இருந்த இடத்திற்கு சென்று கூட்டத்தை களைந்து போகுமாறு கூறினர். பின்னர் மேடையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி, ஆனந்த், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேசி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேச உள்ளார்.