தமிழ்நாடு

பொன்னேரியில் தலை இல்லாத பச்சிளம் சிசுவின் சடலம்...நாய் இழுத்து சென்றதால் பரபரப்பு

பிறந்து 10 நாட்களே ஆன சிசுவின் சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை

 பொன்னேரியில் தலை இல்லாத பச்சிளம் சிசுவின் சடலம்...நாய் இழுத்து சென்றதால் பரபரப்பு
தலை இல்லாத சிசுவின் உடல்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் செஞ்சியம்மன் நகர் பகுதியில் நாய் ஒன்று தலை இல்லாத பச்சிளம் குழந்தையின் சடலத்தை இழுத்து வந்து சாலையில் போட்டு கடித்து குதறியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து நாயை அங்கிருந்து விரட்டிவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை என்பதும், அதில் தலை மற்றும் ஒரு கை இல்லாமல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பச்சிளம் சிசுவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை

திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தை என்பதால் புதரில் வீசியதை நாய் இழுத்து வந்ததா, உடல்நலக்குறைவால் இறந்த குழந்தையை ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக புதைத்த சடலத்தை நாய் கவ்வி வந்ததா, குழந்தையின் பெற்றோர் யார், குழந்தை காணாமல் போனதாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஏதேனும் புகார் வந்துள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை இல்லாத பச்சிளம் சிசுவின் சடலத்தை நாய் கவ்வி வந்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.