தமிழ்நாடு

சூளைமேடு விவகாரம்: 'பொறுப்பு அதிகாரி யார்? - மாநகராட்சிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய போலீஸ்!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சூளைமேடு விவகாரம்: 'பொறுப்பு அதிகாரி யார்? - மாநகராட்சிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய போலீஸ்!
சூளைமேடு விவகாரம்: பொறுப்பு அதிகாரி யார்? - மாநகராட்சிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய போலீஸ்!
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழப்புக்கான பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு, சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் மாநகராட்சியின் அலட்சியமே காரணம் என மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், தீபாவின் தாயார் லட்சுமி அளித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழப்புக்கு யாருடைய அலட்சியம் காரணம் என்பதைக் கண்டறிய, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி போலீசார் மாநகராட்சிக்கு முதல் கடிதத்தை அனுப்பினர். ஆனால், அதற்கு மாநகராட்சி அளித்த பதில் கடிதத்தில், அந்தப் பணியைத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், தேவையான முழுமையான விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிகிறது.

இதையடுத்து, போலீசார் தங்கள் சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்து, தற்போது இரண்டாவது கடிதத்தை மீண்டும் மாநகராட்சிக்கு அனுப்பி உள்ளனர். அந்தக் கடிதத்தில், மாநகராட்சிப் பொறுப்பு அதிகாரி யார்? மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட நபர்கள் யார்-யார்?, அந்தத் தனியார் நிறுவனத்தின் முழு விவரங்கள் என்ன? என அனைத்துக் கேள்விகளையும் குறிப்பிட்டு, விரிவான அறிக்கையாக அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்திற்கு உரிய விளக்கம் வந்த பிறகு, உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.