அரசியல்

மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு- விஜய் அதிரடி அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆக.25ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று பூமி பூஜை ஆரவாரமாக நடைபெற்றது.

மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு- விஜய் அதிரடி அறிவிப்பு
தவெக தலைவர் விஜய்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி 2 ஆண்டுகள் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இது தமிழக அரசியலில் பேசு பொருளானது. அதன் பிறகு விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

விஜய்யின் அரசியல் நகர்வுகள்

மேலும் தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு சிலை அமைத்தல், பரந்தூர் மக்களுடன் சந்திப்பு, லாக்கப் மரணங்களில் உயிரிழந்த குடும்பத்தினருடன் சந்திப்பு என விஜய்யின் அடுத்த அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பாஜகவையும், திமுகவையும் தங்கள் கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளாக அறிவித்து விஜய் களமாடி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தற்போதே அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை தொடங்கி உள்ளன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரச்சாரங்களை தொடங்கி உள்ளனர்.

மதுரையில் மாநாடு

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி” என விஜய் கூறியுள்ளார்.

கூட்டணி அறிவிப்பு?

இந்த மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மதுரையில் இன்று காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைய உள்ளது. இதில் 2026 சட்டமன்றத்தேர்தல் கூட்டணி குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.