அரசியல்

கூட்டணி குறித்து விஜய்யுடன் ரகசிய பேச்சு வார்த்தையா? செல்வப்பெருந்தகை பதில்!

தவெகவுடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மறைமுகமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து விஜய்யுடன் ரகசிய பேச்சு வார்த்தையா? செல்வப்பெருந்தகை பதில்!
Vijay and Selvaperunthagai
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மறைமுகமாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியக் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்றும், அதிமுக கூட்டணியில்தான் மாற்றங்கள் வரும் என்றும் கூறினார்.

காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை

“கூடுதல் இடங்கள் வேண்டும் என எங்கள் கட்சியினர் தங்களது விருப்பங்களைத் தெரிவிக்கிறார்கள். இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்படாது. காங்கிரஸ் கட்சியின் தலைமைதான் இறுதியான முடிவை எடுக்கும். கட்சியில் உள்ளவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பேசலாம். ஆனால், கட்சியின் தலைவர்கள் கூட்டங்களில் மட்டுமே பேச வேண்டும்” என்றார்.

'எடப்பாடி கூட்டணியில் தான் மாற்றம்'

“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்துதான் அனைவரும் வெளியே செல்கின்றனர். டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியேறிவிட்டனர். புதிதாக செங்கோட்டையன் கிளம்பி உள்ளார். எடப்பாடி முதலில் அதிமுகவைச் சரி செய்யட்டும். பிறகு இந்தியக் கூட்டணிக்குள் வரட்டும்” என்று அவர் கூறினார்.

விஜய் மற்றும் போராட்டம் குறித்து...

விஜய் பிரச்சாரத்துக்கு பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு கேளிவிக்கு பதிலளித்த அவர், "நடிகர் விஜய் பேசுவதை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர் என்ன பேசுகிறார் என்பது தெரியவரும். காங்கிரஸ் நடத்தும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் போராடிதான் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. போராட்டத்தின் போது காவல்துறை கைது செய்தால் அது அரசின் நெருக்கடி என்று சொல்ல முடியாது" என்றும் அவர் கூறினார்.

மேலும், விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, "தவெகவுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி மறைமுகமாக எதுவும் பேசவில்லை. இதில் என்ன தேவை இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 100 ஆண்டுகள் கடந்த வரலாற்றை கொண்ட கட்சி" என்று பதிலளித்தார்.