சென்னையில் விடிந்தும் விடியாததுமாய் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் செல்வப்பெருந்தகைக்காக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்து. அரசியல்வாதிகளுக்கு போஸ்டர் அடிப்பது என்பது வழக்கம் தான், ஆனால் செல்வப்பெருந்தகைக்கு அடிக்கப்பட்ட இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அதாவது, இந்த போஸ்டரில் தமிழக காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகையின் பெயருக்கு மேல் 2026ன் துணை முதல்வரே என அச்சிடப்பட்டிருந்தது.
ஒரு புறம் இது செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களின் ஆசை எனக்கூறப்பட்டாலும், மறுபுறம் திமுக தலைமைக்கு தமிழக காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கவே இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டுவதாக கூறப்படுகிறது.
அதாவது இந்த போஸ்டரை நன்கு கவனித்தால், விஜய்யுடைய தவெக கட்சியின் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கை இடம்பெற்றிருக்கிறது. அரசியலில் புது எண்ட்ரீயான விஜய் பக்கா ப்ளான் போட்டு அக்கட்சியின் முதல் மாநாட்டில் இருந்து, சமீபத்தில் நடந்த பொதுக்குழு வரை திமுகவின் கூட்டணி கட்சிகளை கவரும் வகையில் பேசிவருகிறார். இதனையடிப்படையாக வைத்தே திமுகவின் கூட்டணி கட்சிகள் தொகுதிகளை உயர்த்தி கேட்பதாகவும், சிலர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தலைமையிடம் முறையிட்டதாகவும் அறிவாலய வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் இதையெல்லாம் மனதில் வைத்து தான் தமிழக காங்கிரஸ் தற்போது புது டிமாண்ட் ஒன்றை திமுக தலைமையிடம் வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸுக்கு 40 தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் எனவும், வெற்றிப்பெறும் பட்சத்தில் காங்கிரஸ் மாநில தலைவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் எனவும் செல்வப்பெருந்தகை ரூட் போடுவதாக கதர் சட்டைகள் முணுமுணுக்கின்றனர்.
ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கட்சியில், செல்வப்பெருந்தகைக்கு எதிராக மாவட்டத் தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி சொந்த கட்சியிலேயே செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், துணை முதல்வர் பதவிக்கு அடிப்போடுவது, ’என்ன ரெங்கா நியாயமா’ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விஷயம் தீயாய் பற்றி எரிய, அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார் செல்வப்பெருந்தகை. அந்த அறிக்கையில், “இந்தியா கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் பல்வேறு மதவாத தீய சக்திகள் கருமேகக் கூட்டம்போல் சூழ்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த மதவாத தீய சக்திகள் கூடுதலாக நமது ஒற்றுமையை குலைக்க பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒற்றுமையாக இருக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும், ஒற்றுமையை கெடுக்கின்ற வகையிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் தங்களுடைய வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். கூட்டணி பற்றி பேசுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு திமுக தலைமை கொடுக்கப்போகும் பதில் என்ன? காங்கிரஸ் தலைமை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்..
- ஜனனி சசிகலா✒️
அரசியல்
துணைமுதல்வர் செல்வப்பெருந்தகை? போஸ்டரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை..!
சென்னையில் ஆங்காங்கே தமிழக காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்காக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளாது. இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அப்படி அந்த போஸ்டரில் இருந்தது என்ன? தமிழக காங்கிரஸ் போடும் தனி ரூட் என்ன? செல்வப்பெருந்தகை வைத்திருக்கும் விளக்கம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...