அரசியல்

திமுகவின் ஊதுகுழலாக சிபிஎம் செயல்படுகிறது- நயினார் நாகேந்திரன்

தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

 திமுகவின் ஊதுகுழலாக சிபிஎம் செயல்படுகிறது- நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவரும், எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இஸ்ரேலின் சர்வதேச முன்னேற்ற கூட்டமைப்பும் தமிழகத் தோட்டக்கலைத்துறையும் ஒன்றிணைந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு விவசாயிகளுக்காக நடத்தவிருந்த பயிற்சி முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தின் பேரில் திமுக அரசு ரத்து செய்துள்ளது கண்டனத்திற்குரியது.

திமுகவின் ஊதுகுழல்

குறைந்த பாசன வசதியில் நிறைய மகசூலுடன் வேளாண்துறையில் புரட்சி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் தொழில்நுட்பக் கலையை நமது தமிழக விவசாயிகளுக்குக் கற்றுத்தராமல் தடுப்பதில சிபிஐஎம்-க்கு அப்படி என்ன ஆனந்தம்? இதுவரை 'சித்தாந்தம்' எனும் பெயரில் கமிஷன் பெறும் பொருட்டு, திமுகவின் ஊதுகுழலாக செயல்பட்டு, தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் போரிடுவதால், தமிழக விவசாயிகள் இஸ்ரேலின் வேளாண் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்? இஸ்ரேல் தொழில்நுட்பத்தின் பயனாக ஹரியானா-வின் தோட்டக்கலை உற்பத்தி கடந்த 14 ஆண்டுகளில் 37% உயர்ந்துள்ளது.

மக்கள் விரோதப் போக்கு

அதேபோல் பஞ்சாப் போன்ற மாநிலங்களும் இஸ்ரேல் கூட்டமைப்புடன் தங்களது வேளாண் உற்பத்தியை உயர்த்த முயற்சித்துவரும் வேளையில், ஓட்டுவங்கி அரசியலுக்காக, சிறுபான்மையினரைக் கவருவதாக நினைத்துக் கொண்டு ஏழை எளிய விவசாயிகளின் நலனைக் கைகழுவியுள்ளது திமுக அரசு.

புதிய விவசாய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள 100 விவசாயிகளை இஸ்ரேலுக்கு அனுப்ப அரசு தயாராக இருப்பதாக தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரைத்த நிலையில், தற்போது ஏன் இந்த புதிய நிலைப்பாடு? இதை நிறுத்தியது ஏன்? தேர்தல் காலம் நெருங்கிவிட்டால், உழவர் நலன் கண்ணில் புலப்படாதா? வாக்கு வங்கி அரசியலுக்காக, உணவளிக்கும் விவசாயிகளின் நலனை அலட்சியப்படுத்தும் இந்தப் பாசிச திராவிட மாடல் கூட்டணி தனது மக்கள் விரோதப் போக்கால் விரைவில் வீழ்வது உறுதி!” என தெரிவித்துள்ளார்.