அரசியல்

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு… செல்வப்பெருந்தகை கண்டனம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு… செல்வப்பெருந்தகை கண்டனம்
Selvaperunthagai
சேலம் மாவட்டம், அண்ணா பூங்கா முன்பு வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்த நபர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கருணாநிதியின் உருவச்சிலையின் மீது கருப்பு பெயிண்ட் ஊற்றிய சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சேலம், அண்ணா பூங்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது சில விஷமிகள் கருப்பு பெயிண்ட் ஊற்றி சேதப்படுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் மூலம் அவரது புகழை சிறுமைப்படுத்த முடியாது.

சிலைகளை சேதப்படுத்துவது அநாகரீகமான செயலாகும். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.