இந்தியா

உ.பியில் அதிர்ச்சி: போதைக்கு அடிமையான மகனை சுட்டுக்கொன்ற தந்தை

உத்தரப்பிரதேசத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் அதிர்ச்சி: போதைக்கு அடிமையான மகனை சுட்டுக்கொன்ற தந்தை
drug addict shot dead by father
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் தில்கர் பகுதியில், போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்ஹர் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற கணக்காளர் ஓம்கார் கங்வாருக்கும் (67), அவரது மகன் ஹர்ஷ்வர்தன் கங்வாருக்கும் (32) இடையே நீண்டகாலமாகவே தகராறுகள் இருந்து வந்தன. ஏனெனில் ஹர்ஷ்வர்தன் போதைப்பொருட்களைப் பயன்படுத்திவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி இரவு, ஹர்ஷ்வர்தன் மீண்டும் போதையில் வீட்டிற்கு வந்தபோது, அவருக்கும் தந்தை ஓம்காருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஓம்கார், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மகனை இரண்டு முறை சுட்டுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஹர்ஷ்வர்தனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஹர்ஷ்வர்தன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மகனை பயமுறுத்துவதற்காகவே தந்தை ஓம்கார் துப்பாக்கியை எடுத்ததாகவும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் எதிர்பாராத விதமாக தோட்டா வெளியேறியதால் மரணம் ஏற்பட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீக்ஷா பவாரே தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓம்கார் கங்வாரை கைது செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.