இந்தியா

இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ தான்.. பெயர் மாற்றத்திற்கு காரணம் என்ன?

மைசூர் பாக்கில் உள்ள 'பாக்' என்ற வார்த்தை பாகிஸ்தானை குறிப்பதால், ஆப்ரேஷன் சிந்தூர்-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின் இடையே மைசூர் பாக் இனிப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ தான்.. பெயர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
இனி மைசூர் பாக் இல்ல.. மைசூர் ஸ்ரீ தான்
இந்திய இனிப்பு வகைகளில் மைசூர் பாக் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக மைசூரி பாக் உள்ளது. மைசூர் பாக் என்பது கர்நாடகாவின் மைசூரிலிருந்து உருவான ஒரு பிரபலமான இந்திய இனிப்பு இனிப்பு ஆகும். இந்நிலையில்,மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்பு வகைகள் இனி மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என மாற்றியுள்ளதாக த்யோஹார் இனிப்புக்கடையின் உரிமையாளரான அஞ்சலி ஜெயின் கூறியுள்ளார்.


இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய எல்லை பதற்றம், சமூகத்தில் பல விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உணவுப்பொருட்களின் பெயர்களிலும் இதன் தாக்கம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

"பாக்" என்ற சொல்லானது பாகிஸ்தானை நினைவூட்டுவதாக சிலர் கருத்து தெரிவித்ததால், வணிகர்கள் பாதுகாப்பான முடிவாக இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர். இதற்கு மேலும், "கராச்சி ஹல்வா" போன்ற இனிப்புகளும், அவை பாகிஸ்தானை சார்ந்த நகரங்களுடன் தொடர்புடையதாக இருப்பதால், புதிய பெயர்களில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த மாற்றங்களை சிலர் வரவேற்கும் நிலையில், சிலர் அதைப் விமர்சிக்கின்றனர். "மைசூர் பாக்" என்பது மைசூரின் பாரம்பரிய இனிப்பு; அதில் பாகிஸ்தானோ அதன் கலாச்சாரமோ தொடர்பில்லை என்பதே ஒரு பகுதி மக்களின் பார்வை. உணவுப் பெயர்கள் அரசியல் பதற்றத்தின் காரணமாக மாற்றப்படுவது தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனிப்புகளின் பெயர்கள் மாற்றப்பட்டாலும், அதன் சுவையும் பாரம்பரியமும் மாறாது என்பதில் வணிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இதற்கான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது உணவுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையேயான நுண்ணிய சமநிலையை சுட்டிக்காட்டுகிறது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் உள்ள இனிப்பு கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் கூறுகையில், “நமது சுவையான உணவுகள் நம் தேசத்தின் பெருமையையும் பிரதிபலிக்க வேண்டும். தேசபக்தியின் உணர்வு நம் எல்லைகளில் உள்ள வீரர்களிடம் மட்டுமல்ல, இந்தியர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.

இதனால் தற்போது பாரம்பரிய இனிப்புகளின் பெயர்களில் இருந்த பாக் என்ற பெயர் ஸ்ரீ என மாற்றி உள்ளோம். இந்த முடிவு மொழியில் சார்ந்தது இல்லை. உணர்வுப்பூர்வமானது. வாடிக்கையாளர்கள் இந்த பெயர் மாற்றத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.