இந்தியா

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி.. 202 தொகுதிகளில் முன்னிலை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி.. 202 தொகுதிகளில் முன்னிலை!
NDA Leading in 202 seats
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 202 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகிறது.

வெற்றி நிலவரம் மற்றும் பெரும்பான்மை

மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்க 122 தொகுதிகளில் பெரும்பான்மை பெற வேண்டிய நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த இலக்கைத் தாண்டிச் சென்றுள்ளது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே தொடர்ந்து முன்னிலையில் இருந்த என்.டி.ஏ. கூட்டணி, வெற்றியை உறுதி செய்துள்ளது. பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 202 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

கூட்டணி வாரியான முன்னிலை விவரம்

பிற்பகல் 2:30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. 92 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 81 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 29 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மொத்தமாக 202 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

மெகா கூட்டணி இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்த கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலைப் பெற்று ஒட்டுமொத்தமாக 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. எனவே, பீகாரில் மீண்டும் பா.ஜ.க. - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி தலைமையிலான ஆட்சியமைப் போகிறது என்பது முன்னிலை நிலவரங்கள் மூலமாகவே உறுதி செய்யப்படுகிறது.