இந்தியா

'நான் சாகப்போகிறேன்'.. ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை!

ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர், மூத்த மாணவர்கள் தன்னை அடித்துப் பணம் பறிப்பதாகக் கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

'நான் சாகப்போகிறேன்'.. ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை!
Student victim of ragging commits suicide by posting video
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ராகிங் கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர் ஜாதவ் சாய் தேஜா (22), கல்லூரியின் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் அவர் பதிவு செய்த வீடியோவில், சீனியர் மாணவர்கள் தன்னை மிரட்டி, அடித்து, பணம் பறிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"நான் சாகப்போகிறேன்"

தற்கொலை செய்வதற்கு முன் மாணவர் சாய் தேஜா பதிவு செய்த வீடியோவில், அவர் மிகுந்த பயத்துடனும், மன உளைச்சலுடனும் காணப்பட்டார். "நான் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். நான்கு அல்லது ஐந்து பேர் வந்து என்னை மிரட்டுகிறார்கள். அவர்கள் என்னிடம் பணம் கேட்டு வருகிறார்கள்" என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும், "நான் அச்சத்தில் இருக்கிறேன். என்னிடம் பணம் கேட்டு அடிக்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்? நான் சாகப் போகிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்றும் அவர் உருக்கமான குரலில் பேசியுள்ளார்.

இதையடுத்து, சாய் தேஜாவின் குடும்பத்தினரும், வழக்கறிஞரும் விடுதிக்கு வந்துள்ளனர். இதற்கிடையில் அவர் தற்கொலை செய்துகொண்டதால் குடும்பத்தினர் மனமுடைந்து கதறி அழுதனர்.

வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ஜாதவ் சாய் தேஜாவின் வழக்கறிஞர் கூறுகையில், "ஒருமுறை, ஒரு மதுபான விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாய் தேஜா, மது அருந்த வற்புறுத்தப்பட்டதோடு, சுமார் ரூ.10,000 பணத்தையும் பறித்துள்ளனர். இந்த மன உளைச்சல் மற்றும் அழுத்தத்தைத் தாங்க முடியாமல், சாய் தேஜா தற்கொலை செய்து கொண்டார்" என்று அவர் தெரிவித்தார்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).