இந்தியா

மிளகு ஸ்பிரே அடித்து இளைஞர்களை சித்திரவதை செய்த தம்பதி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைத்து கொடூரமாக தாக்கி பணம் பறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மிளகு ஸ்பிரே அடித்து இளைஞர்களை சித்திரவதை செய்த தம்பதி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
Shocking incident in Kerala
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று, மிளகு ஸ்பிரே, ஸ்டேப்ளர் பின் அடித்து, கொடூரமாகத் தாக்கிய பணம் பபறித்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

கோயப்புரம் அருகே உள்ள சரளகுன்னு பகுதியைச் சேர்ந்த ஜெயேஷ் மற்றும் அவரது மனைவி ரேஷ்மி ஆகியோர், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இரண்டு இளைஞர்களைத் தங்களது வீட்டிற்கு வரவழைத்து இக்கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முதல் சம்பவம்: கடந்த 1 ஆம் தேதி 19 வயது இளைஞர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். அவரை கட்டிப் போட்டு இரும்பு ராடு மற்றும் சைக்கிள் செயினைக் கொண்டு தாக்கி, மிளகு ஸ்பிரே அடித்து, கத்தியால் மிரட்டி, ரூ.19,000 பணத்தைப் பறித்துள்ளனர். பிறகு, ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இரண்டாவது சம்பவம்: ஓணம் அன்று ஜெயேஷின் முன்னாள் நண்பர் ஒருவரை, அவரது வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். அந்த இளைஞரை அடித்து உதைத்து, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, உடலில் ஸ்டேப்ளர் பின் அடித்துள்ளனர். மேலும், அவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டபோது, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. முதலில், "அடையாளம் தெரியாத நபர்கள் என்னைத் தாக்கினர்" என்று அந்த இளைஞர் கூறினாலும், பிறகு போலீசாரின் விசாரணையில் ஜெயேஷ் மற்றும் ரேஷ்மிதான் காரணம் என்று உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, போலீசார் ஜெயேஷ் - ரேஷ்மி தம்பதியை கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து, கணவன்-மனைவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், இந்தத் தாக்குதல் மாந்திரீகம் சம்பந்தப்பட்ட சடங்கின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறியுள்ள நிலையில், போலீசார் இது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஜெயேஷ் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தம்பதியால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.