சமீபத்தில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த பாஸ்போர்ட்டுகளில் சில முக்கிய திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. நீங்கள் புதியதாக பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கும் நபராக இருந்தாலும் சரி அல்லது பழைய பாஸ்போர்டினை புதுப்பிக்கும் நபராக இருந்தாலும் சரி, பாஸ்போர்ட் குறித்து வெளியிடப்பட்டுள்ள இந்த 5 புதிய அப்டேட்டினை தெரிஞ்சிக்கோங்க.
பிறந்தத் தேதிக்கான அடையாளச் சான்று:
அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு, உரிய அதிகாரிகளால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்கள் மட்டுமே இனி பிறந்த தேதிக்கான (D.O.B) ஒரே சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்னு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் படி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பதிவாளர் (The Registrar of Births and Deaths), நகராட்சி நிர்வாகம் (municipal corporation) அல்லது பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969-ன் கீழ் அதிகாரம் பெற்ற வேறு எந்த அதிகார அமைப்பினாலும் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்கள் இனி பாஸ்போர்ட் பெற பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும். அதே போல அக்டோபர் 1, 2023-க்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்களுக்கு, இந்த புதிய விதி பொருந்தாது. இத்தகைய நபர்கள் பிறப்புச் சான்றிதழ், transfer Certificate, school leaving, அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ், பான் கார்டு, ஆதார் கார்டு, EPIC Card/ Voter Id, ஓட்டுநர் உரிமம் அல்லது விண்ணப்பதாரரின் சேவைப் பதிவின் நகல் (Pension order) உள்ளிட்ட பிற ஆவணங்களை சமர்ப்பித்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு முகவரி:
பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் விண்ணப்பதாரரின் குடியிருப்பு முகவரி அச்சிடப்படுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கடைசி பக்கத்தில் முகவரி அச்சிடப்பட்டு வந்த நிலையில், திருத்தம் செய்யப்பட்ட புதிய விதிகளின் கீழ், பாஸ்போர்ட்டில் ஒரு பார்கோடு அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்வதன் மூலம் குடியிருப்பு முகவரி குறித்த தகவலை அதிகாரிகள் தெரிந்துக் கொள்ள முடியும்.
பாஸ்போர்ட் அப்ளை செய்யும்போது இருப்பிடச் சான்றிதழுக்காக சமர்பிக்க வேண்டிய ஆவணங்களின் விவரம் பின்வருமாறு: குடிநீர் கட்டண ரசீது , தொலைதொடர்பு மொபைல் ரசீது (post-paid mobile or landline), மின் கட்டண ரசீது, ஆதார் கார்டு, வீட்டின் வாடகை ஒப்பந்தம், வருமான வரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு எரிபொருள் கட்டண ரசீது, Certificate of employment with formal letterhead மற்றும் பெற்றோர்களின் பாஸ்போர்ட் (விண்ணப்பத்தாரர் 18 வயதுக்கு கீழ் இருப்பின்) போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒன்றினை சமர்பிக்க வேண்டும்.
பெற்றோர் பெயர் தேவையில்லை:
புதிய பாஸ்போர்ட் விதிகளின்படி, பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பெற்றோரின் பெயர்கள் இனி பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தில் அச்சிடப்படாது என கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தனிப்பட்ட தகவல்கள் தேவையற்ற முறையில் வெளியாவதை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியின் மூலம் ஒற்றைப் பெற்றோர் அல்லது பிரிந்த தம்பதியினரின் வாரிசுகள் பெரிதும் பயனடைவார்கள்.
Read more: கோழிகளுக்கு ரூ.100, ஆடுகளுக்கு ரூ.4000 தானா? அரசிடம் கேள்வி எழுப்பும் விவசாயிகள்
அதிகரிக்கப்படும் பாஸ்போர்ட் சேவா மையங்கள்:
பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு திருத்தம் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளில் உதவும் பாஸ்போர்ட் சேவா மையங்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தற்போது உள்ள 442 பாஸ்போர்ட் சேவா மையங்களின் எண்ணிகையினை 600 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் (MEA) தபால் துறையும் தங்களுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளன.
மூன்று நிறங்களில் பாஸ்போர்ட்:
பாஸ்போர்ட்டுகளை எளிதாக அடையாளம் காண கலர் கோடிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கீழ், தூதரக நிர்வாகிகளுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட்டும், அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிற பாஸ்போர்ட்டும், சாதாரண குடிமக்களுக்கு தொடர்ந்து நீல நிற பாஸ்போர்ட்டும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் தனிநபர்களின் விவரங்களை பாதுகாக்கும் தன்மையினை அதிகரிப்பதோடு, நடைமுறையில் உள்ள சிக்கல்களையும் களையும் வகையில் உள்ளதாக பொது மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!