Manoj Bharathiraja: தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்தவர் மனோஜ்- பவன் கல்யாண் இரங்கல்
இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த மனோஜ் பாரதிராஜா மறைவு மனதை பெரிதும் பாதிப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா தன் தந்தை போன்று பெரிய இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் முன்னணி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்துள்ளார். இதையடுத்து, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து, பல படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ‘அன்னக்கொடி’ திரைப்படத்தில் மனோஜ் பாரதிராஜாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை மனோஜ் பாரதிராஜா நிறைவேற்றினார். முற்றிலும் புது முகங்களுடன் உருவான இந்த படத்தில் மனோஜ் பாரதிராஜாவின் தந்தை பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இருதய பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உடல் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பவன் கல்யாண் இரங்கல்
இந்நிலையில், மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பிரபல இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
மனோஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒரு நடிகராக சிறந்து விளங்கும் அதே வேளையில், இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அவர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது.
பாராதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கு மன தைரியத்தை அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read more:
Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு அதிர்ச்சியளிக்கிறது- கமல்ஹாசன்
What's Your Reaction?






