இத நீங்க கண்டிப்பா செய்ய வேண்டும்.. விஜய்க்கு பவன் கொடுத்த அட்வைஸ்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் தலைவராக உருவெடுத்தார்.அப்போது அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் ‘2026 சட்டசபை தேர்தல் தான் தமது இலக்கு’ என்று குறிப்பிட்டிருந்தார். புதிய கட்சி தொடங்கிய விஜய், தான் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். இது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், அரசியல் தலைவர்கள் பலரை உன்னிப்பாக கவனிக்க வைத்தது.
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் விஜய் தனது கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டார்.
பவன் கல்யாண் அறிவுரை
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் அறிவுரை வழங்கியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவன் கல்யாண் பேசியதாவது, “விஜய்க்கு என் அறிவுரை தேவையில்லை. அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு என தனி அரசியல் பயணம் உள்ளது. இருந்தாலும் அவரிடம் நான் ஒன்று கூற விரும்புகிறேன். எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருங்கள். அரசியல் என்பது கடினமான பயணம். விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். வெற்றியை மறந்துவிட்டு முதலில் கட்சியை வலுப்படுத்துங்கள்” என்று கூறினார்.
அரசியல் வாழ்க்கை
தொடர்ந்து அரசியல் குறித்து பேசிய அவர், “அரசியலுக்கு வந்த பிறகு தனிப்பட்ட வாழ்க்கை என்பது இருக்காது. அனைவருக்கும் நீங்கள் எதிரியாக மாறுவீர்கள். என்ன அறிக்கை வெளியிட்டாலும் அது தவறாக சித்தரிக்கப்படும். ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒரு ஸ்டைல் இருப்பது போன்று ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். என் ஸ்டைல் எனக்கு கைக்கொடுத்தது. ஆனால் அது எல்லோருக்கும் உதவும் என்று சொல்ல முடியாது” என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.
What's Your Reaction?






