இந்தியன் 2வும் போச்சு....மூடப்படும் நிலையில் பல திரையரங்குகள்
Trichy Sridhar About Theatres in Tamil Nadu : தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, வசூல் குறைவு போன்ற காரணங்களால் பல தியேட்டர்கள் மூடப்படும் நிலைக்கு செல்கின்றன. இந்தியன் 2 படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழுவும் வாய் திறக்க மறுக்கிறது.
Trichy Sridhar About Theatres in Tamil Nadu : இந்தியன் 2 உட்பட பல படங்கள் ஓடாத நிலையில், தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சமீபத்தில் மின் கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பல திரையரங்குகள் மூடப்படும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச்செயலாளர் திருச்சி ஸ்ரீதர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் , ‘‘இந்தியன் 2(Indian 2) இன்று வசூல் மிகக்குறைவாக உள்ளது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், இயக்குனர்கள். நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது, இப்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு மற்றும் மிக குறைவான வசூல் போன்ற காரணங்களால் நிறைய திரையரங்குகள் மூடக்கூடிய அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இனி, சற்று தரமான கதை அம்சம் கொண்ட படங்களை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் கேட்டுக்கொள்கிறோம். தயாரிப்பாளர்களும் சேட்டிலைட் உரிமம் மற்றும் ஓ டி டி வியாபாரம் ஆகியவை சரியாக இல்லாததால் பெரிய பாதிப்பை சந்திக்கிறார்கள். வட்டி கட்ட முடியாத சூழ்நிலை, இதை கருத்தில் கொண்டும், திரையரங்குகள் மூடப்படும் அபாயத்தையும் தவிர்க்க வேண்டும். அனைவரும் சேர்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து திருச்சி ஸ்ரீதரை(Trichy Sridhar Speech) தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில் ‘‘2024ம் ஆண்டு இதுவரை 169 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் அரண்மனை 4, கருடன், மகாராஜா போன்ற படங்களே அனைத்து தரப்புக்கும் லாபத்தை சம்பாதித்துக்கொடுத்தன. பிரேமலு, மஞ்சும்மல்பாய்ஸ் போன்ற ஒரு சில படங்களும் வெற்றி பெற்றன.ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான படங்கள் ஓடவில்லை. மிக மோசமான கட்டத்தில் தமிழ்சினிமாவும், தியேட்டர்களும் இருக்கின்றன. இப்போது மின்கட்டண உயர்வு வேறு. சமீபத்தில் வெளியான படங்களில் கல்கி 2898ஏடி, இந்தியன்2 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ஏமாற்றிவிட்டன. இப்படிப்பட்ட நிலை தொடர்ந்தால் தியேட்டர் அதிபர்களின் நிலை மோசமாகிவிடும். பல தியேட்டர்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஓடிடி, சாடிலைட் விற்காததால் தயாரிப்பாளர்களும் ஏகப்பட்ட நிதிச்சுமை’ என்றார்.
‘‘சரி, இந்த பாதிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்’’று கேட்டால், ‘‘ முதலில் தரமான, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்க வேண்டும். தயாரிப்பு செலவு, நடிகர்களின் சம்பளம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். தியேட்டர்களுக்குஅரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்’’ என்றார். இந்தியன் 2 குறித்து கேட்டால், 3 மணி நேர நீளம் காரணமாகவும், கதை, கமர்சியல் விஷயங்கள் இல்லாததும் பாதிப்பு. முன்பே குறிப்பிட்ட நேரத்தை எடிட் செய்து குறைத்திருக்க வேண்டும். இந்தியன் 2 ஏமாற்றமே. அதிரடியாக ஏதாவது மாற்றம் செய்தால் மட்டுமே மாற்றம், நம்பிக்கை வரும்’ என்கிறார்
இந்தியன் 2 குறித்து சினிமா வட்டாரங்களி்ல் பேசினால், ‘‘ஒரு பெரிய பட்ஜெட் படம் வெளியாகும்போது அல்லது முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வரும்போது முதல் நாள் வசூல் இ்வ்வளவு, அடுத்த நாள் வசூல் இவ்வளவு, ஒரு வார வசூல் இத்தனை கோடி என தகவல் வரும். படக்குழுவே நேரடியாக , மறைமுகமாக வசூலை சொல்லும். ஆனால், இதுவரை இந்தியன் 2 வசூல் எவ்வளவு என்பதை யாரும் சொல்லவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லாததால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை நாலைந்து படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த வாரம் எந்த படமும் ரிலீஸ் ஆன மாதிிரி தெரியவில்லை. தமிழ்சினிமா நிலைமை மிகவும் மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், பல முன்னணிநடிகர்கள், இயக்குனர்கள் இதை பற்றி கவலைப்படாமல் சம்பளத்தை செலவை ஏற்றிக்கொண்டே போகிறார்கள். இதை கட்டுப்படுத்த சில மாதங்களில் சினிமா ஸ்டிரைக் அல்லது படப்பிடிப்பை நிறுத்த சினிமா சங்கள் முடிவு என்றும் கூறப்படுகிறது’ என்கிறார்கள்
What's Your Reaction?