ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி; நினைத்த காரியங்களை நிறைவேற்றும் விநாயகப் பெருமான்
Aadi Month Sangadahara Chaturthi 2024 Benefits in Tamil : விநாயகருக்கு மிகவும் விருப்பமான சங்கடஹர சதுர்த்தி அன்று மேற்கொள்ள வேண்டிய விரதங்கள், பூஜைகள் மற்றும் அதனால் கிடைக்கப்பெறும் நன்மைகள் குறித்து கீழே காணலாம்.
Aadi Month Sangadahara Chaturthi 2024 Benefits in Tamil : சதுர்த்தி என்றாலே அது விநாயகருக்கு உகந்த நாள் என அனைவரும் அறிந்ததே. விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு எத்தனை விரதங்களும், தினங்களும் இருந்தாலும், அதில் மிக முக்கியமாகக் கருதப்படுவது சங்கடங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தியாகும். சங்கட என்றால் துன்பங்கள்/ சங்கடங்கள், ஹர என்றால் அழித்தல் என்பது பொருளாகும்.
ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் 4வது நாள் சங்கடஹர சதுர்த்தியாகக் கருதப்படுகிறது. மாதம்தோறும் சங்கடஹர சதுர்த்தி வந்தாலும், ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்றாகும். இந்நன்னாளில் விநாயகரை மனதார நினைத்து விரதம் மேற்கொண்டால், சங்கடங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வு நலம் பெறும் என்பது ஐதீகம்.
ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்:
சங்கடஹர சதுர்த்தி நாளன்று, அதிகாலையிலேயே எழுந்து நீராடி, அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு செல்ல வேண்டும். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள் என்பதால் “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற எளிய மந்திரத்தை உச்சரித்து வணங்கினாலே போதுமானது. விநாயகர் மனம் குளிர்ந்து ஓடோடி வந்து உங்கள் வாழ்வில் உள்ள சங்கடங்களை நீக்கி அருள் புரிவார்.
இந்த தினத்தில், விநாயகப் பெருமானை மனதார நினைத்துக்கொண்டு காலை முதல் மாலை வரை விரதம் இருக்க வேண்டும். உணவை தவிர்க்க முடியாதவர்கள், உப்பு சேர்க்காத உணவை எடுத்துக்கொள்ளலாம். அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
ஒரு வேளை விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், மாலை நேரத்தில் விநாயகரின் சன்னதிக்கு சென்று பூஜைகள் மேற்கொள்ளலாம். விநாயகருக்கு மேற்கொள்ளப்படும் அபிஷேகத்திற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி, அருகம்புல் போன்ற பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். அபிஷேகம் முடிந்ததும் எட்டு முறை ஆலயத்தை சுற்றி வர வேண்டும்.
விரதம் இருந்தும் கோயிலுக்கு சென்றவர்கள் விநாயகருக்குப் படைக்கப்பட்ட பழங்கள் அல்லது பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி பலன்கள்:
சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விரதமிருந்து தூய்மையான பக்தியுடன் பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு தனது அருளையும் அன்பையும் அள்ளி வழங்குவார் ஆனைமுகத்தான். உங்களது வாழ்வில் உள்ள அனைத்து துயரங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். சுப காரிய தடைகள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். புதிதாக மேற்கொள்ளும் முயற்சிகள் சிறப்பாக அமைவதோடு தொழிலில் முன்னேற்றங்கள் ஏற்படும். திருமணத் தடைகள் நீங்கி பெண்களுக்கு நல்ல வரன் அமையும் எனக் கூறப்படுகிறது. தொட்டதெல்லாம் வெற்றியடையும் மற்றும் நினைத்த காரியங்கள் நிச்சயம் நிறைவேறும்.
மேலும் குழந்தைகளின் கல்வி மேம்பட்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறுவார்கள். வேலை தேடி அலைந்த இளைஞர்கள் மற்றும் ஊதிய உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும் என ஜோதிடவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?