அரசியல்

தவெக ஆட்சி கவிழ்க்க சதி...... ஹவாலா பணம் பறிமுதல் ....

தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தவெக ஆட்சி கவிழ்க்க சதி...... ஹவாலா பணம் பறிமுதல் ....
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செயலில் ஈடுபட்டதாக யூடியூப்பர் IDPS திருநாவுக்கரசு, நரேஷ் உள்பட 12 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் இருவரும் நீதிமன்றம் மூலம் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் பெற்றனர்.


மேலும் தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் விஜயன் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டத்திற்கு கைதான கும்பல் "மேகாலயா பிராஜக்ட்" என்று பெயரிட்டு உள்ளது.

IPDS திருநாவுக்கரசு என்பவர் மேலும் சில நபர்களுடன் சேர்ந்து சட்டமன்ற வாக்கெடுப்பில் தவெக எடுக்கும் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சொல்லும்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் ரூபாய் 35 கோடி லஞ்சம் வழங்குவதாக பேரம் பேசப்பட்டது தெரிய வந்தது. அவ்வாறு செயல்பட மறுத்ததால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

"மேகாலயா பிராஜக்ட்" என்ற பெயரில் சுமார் 15 தவெக சட்ட மன்ற உறுப்பினர்களை பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியின் நிலைத்தன்மையை சீர் குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. கைதானவர்களின் அனைவரது செல்போனில் வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை சேகரிக்க சைபர் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு போலீசார் தங்களின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கொரட்டூரைச் சேர்ந்த கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் வெங்கடேசன் ஆகியோரை பிடித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் இருந்த ரூ. 2.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட நரேஷூடன் இவர்கள் 3 பேரும் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஹவாலா பணம் என்று கூறப்படுகிறது.மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.