GT vs PBKS: அதிரடி காட்டிய கேப்டன் Shreyas.. 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!
அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. சாய்சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் குஜராத் வெற்றிக்காக போராடிய நிலையில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிரடி காட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18 வது சீசனை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

TATA IPL 2025 கிரிக்கெட் தொடரின் 18 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 5 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இன்று (மார்.25) குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய 5-வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
18 வது சீசன் 17 வது கேப்டன்
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் யுவராஜ்சிங்கை கேப்டனாக கொண்டு முதல் போட்டியில் களமிறங்கியது. ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் ஒவ்வொரு முறையும் கேப்டன்கள் மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்தது. இந்த 18- வது சீசன் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 17-வது முறையாக தனது கேப்டனை மாற்றியுள்ளது. இம்முறை ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் இப்போட்டியில் பஞ்சாப் அணி களமிறங்கியது. நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணிக்கு கோப்பை பெற்றுக்கொடுத்த ஸ்ரேயஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணிக்காக மெகா ஏலத்தில் வாங்கப்பட்டார். பஞ்சாப் அணி ஸ்ரேயஸ் ஐயர் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.
டாஸ் வென்ற குஜராத்
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து முதல் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். அறிமுக வீரரான பிரியான்ஷ் ஆர்யா சிறப்பான ஆட்டட்த்தை வெளிப்படுத்தினார். பிரப்சிம்ரன் சிங் 8 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், 5 ரன்களை மட்டுமே எடுத்து ரபாடா பந்துவீச்சில் அர்சத் கானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதிரடியாக விளையாடி ஆர்யா 23 பந்துகளில் 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை விளாசிய 23 பந்துகளில் 47 ரன்களை எடுத்த நிலையில், ரஷித் கான் பந்துவீச்சில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதிரடி காட்டிய கேப்டன்
பிரப்சிம்ரன் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தனி ஆளாக குஜராத் அணிக்கு ஆட்டம் காட்டினார். தனது பேட்டிங் மூலம் சிக்சர் மழை பொழிந்த ஸ்ரேயஸ் ஐயர் 42 பந்துகளில் 9 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். அஸ்மதுல்லா 16 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுபுறம் ஷஷங்ச் சிங் குஜராத் வீரர்களின் பந்துகளை பவுண்டரிகளை விரட்டிக்கொண்டிருந்தார்.
டக்கவுட் ஆன மேக்ஸ்வெல்
நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் ஒரு பந்தை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், எல்டபிள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் மற்றும் ஷஷங்ச் இணை பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தியதில் பெரும் பங்காற்றினர். 20 ஓவர் முடிவிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை குவித்தது.
244 ரன்கள் இலக்கு
குஜராத் டைட்டன்ஸ் அணி 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் சுப்மன்கில் அதிரடியாக விளையாடத் தொடங்கினர். கேப்டன் சுப்மன் கில் 14 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில், மேக்ஸ்வெல் பந்துவீச்சில் பிரியான்ஷ் ஆர்யாவிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் தமிழத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 41 பந்துகளில் 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்களை குவித்த நிலையில், வேகப்பந்து பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஓவரில் ஷஷங்ச் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஜாஸ் பட்லர் அரைசதம்
சாய்சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 33 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 2 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 54 எடுத்த நிலையில், மார்க்கோ ஜான்சன் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். ராகுல் திவேட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஷெபேன் ரூதர்போர்ட் குஜராத் அணியின் வெற்றிக்காக போராடிய நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். கடைசி பந்தை எதிர்கொண்ட ஷாருக்கான் சிக்சருக்கு விளாச குஜராத் அணி 20 ஓவரில் 232 ரன்களை மட்டுமே எடுத்தது. இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
What's Your Reaction?






