அமெரிக்க செல்ல 41 நாடுகளுக்கு தடை அதிரடி காட்டும் டொனால்டு டிரம்ப்..!

சட்டவிரோதமாக குடியேறிவர்கள் என்று கூறி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி வரும் டிரம்ப் அரசு, அதன் அடுத்தக்கட்டமாக 41 நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Mar 16, 2025 - 18:49
 0
அமெரிக்க செல்ல 41 நாடுகளுக்கு தடை அதிரடி காட்டும் டொனால்டு டிரம்ப்..!
அமெரிக்க செல்ல 41 நாடுகளுக்கு தடை அதிரடி காட்டும் டொனால்டு டிரம்ப்..!

அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த பெரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வசிக்கும் சட்ட விரோத குடியேறிகள் கொத்து கொத்தாக வெளியேற்றப்பட்டனர். அதில் இந்தியர்கள் பலரும் இருந்தனர். 

இந்த நிலையில், பாகிஸ்தான் உட்பட 41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதித்து அதிரடி காட்டியுள்ளார் டொனால்டு டிரம்ப். அதன்படி மூன்று நிலைகளில் நாடுகளை வகைப்படுத்தி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. 

முதல் நிலையில் ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா, ஏமன் ஆகிய 10 நாடுகளுக்கு முழுமையாக விசா ரத்து செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது நிலையில் எரிதீரியா, ஹைதி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு சில நிபந்தனைகளுடன் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சுற்றுலா, கல்வி, புலம்பெயர்ந்தோருக்கான விசா ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

மூன்றாவது நிலையில், 26 நாடுகளுக்கு அமெரிக்கா கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளது. அதாவது, பாகிஸ்தான், பூடான், அங்கோலா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா, பெலாரஸ், பெனின், புர்கினா பாசோ, காபோ வெர்டே, கம்போடியா, கேமரூன், சாட், காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எக்குவடோரியல் கினியா, காம்பியா, லைபீரியா, மலாவி, மவுரித்தேனியா, காங்கோ குடியரசு, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, சாவ் டோம் மற்றும் பிரின்சிப், சியரா லியோன், கிழக்கு திமோர், துர்க்மெனிஸ்தான், வனுவாட்டு ஆகிய நாடுகளின் விசாவில் குறைபாடுகள் உள்ளதாகவும், அந்த குறைபாடுகளைக் களைய 60 நாட்களுக்குள் அந்த நாடுகளின் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் விசாக்களில் இந்த 26 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மாணவர் மற்றும் சுற்றுலா விசா கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முன்மொழிவு தொடர்பாக அமெரிக்க அரசு நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் கொடுக்கவில்லை என்றாலும், தற்போதைய பயணத்தடை மற்றும் கட்டுப்பாடு தொடர்பான செய்திகள் டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளுக்கு விதித்த தடையைப் போன்றே உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow