தமிழ்நாடு

ராகுல் காந்தி குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனப்படுத்தினர் - தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடிப் பேச்சு!

முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி இன்று மாலை அறிவிக்கவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.

 ராகுல் காந்தி குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனப்படுத்தினர் - தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடிப் பேச்சு!
ராகுல் காந்தி குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனப்படுத்தினர் - தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடிப் பேச்சு!
இன்று மாலை பிரதமர் ஒரு வானவேடிக்கை போன்ற அறிவிப்பை வெளியிடப் போகிறார். நாளைய தினத்திலிருந்து நாம் எந்தப் பொருள் வாங்கினாலும் விலை குறைவாக வாங்க முடியும். பாக்கெட்டில் பணம் மிச்சமாகும், என்று தமிழிசை கூறினார். சுதந்திரம் அடைந்த பிறகு வரி குறைப்பு என்பது அரிதான நிகழ்வு என்றும், பிரதமரின் இந்த அறிவிப்பு சாமானிய மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வீடு, கார், டூவீலர் எனப் பல பொருட்களின் வரி குறைப்பு மூலம் மக்களுக்குச் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்திய சுதந்திரத்திற்குப் பின் கிடைத்த ஒரு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரம் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், உங்களோடு நான், எங்களோடு நீ என வெறும் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மின் கட்டணம், பதிவுக் கட்டணம் என அனைத்தும் ஏறிவிட்டன. 'உங்களோடு பிரதமர்', 'உங்களோடு பாஜக' என்பதே சரியான முழக்கம் என்று கூறினார்.

அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்கள்குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், H1B தொடர்பாக வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுக்கான பணி பாதுகாப்பு மற்றும் திரும்ப வருவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும். பிரதமர் மோடி யாரையும் கைவிட மாட்டார், என்று உறுதி அளித்தார்.

மேலும், பாஜக-அதிமுக கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், திமுகவினருக்கு அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். பாஜகவிற்கு யாராவது பி-டீமாக இருப்பார்கள் எனச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், பாஜக என்பது 'பீப்பிள்ஸ் டீம்' (மக்களின் அணி) என்று தெரிவித்தார்.