தமிழ்நாடு

மலை கிராம மக்களிடையே மோதல் - போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு

 மலை கிராம மக்களிடையே மோதல் - போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
வேலூர் அணைக்கட்டு அருகே இரு மலைகிராம மக்களிடையே மோதல்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பீஞ்சமந்தை, 3 ஜார்த்தான் கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை பஞ்சாயத்துக்கு உட்பட்டு 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் பாரம்பரிய கலாச்சார கோயில் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் பீஞ்சமந்தை அடுத்த செங்காடு மலையில் காளியம்மன் திருவிழா நடந்து வருகிறது. அப்போது எருது கட்டு உள்ளிட்ட பாரம்பரிய கலாச்சார திருவிழா நடந்து வருகிறது.

மலை கிராம மக்களிடையே மோதல்

செங்காடு மலை கோயில் திருவிழாவை காண அல்லேரிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் வந்திருந்தனர்.செங்காடு மலையை சேர்ந்தவர்களுக்கும் அல்லேரி மலையை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் செங்காடு மலையை சேர்ந்தவர்கள் அல்லேரி மலையை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல்லேரி மலையை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு செங்காடு மலைக்குச் சென்றனர்.

இதனிடையே பீஞ்சமந்தை மலையில் இருந்து காரில் வந்தவர்களை மடக்கி ஒரு தரப்பினர் பாதுகாப்புக்கு வந்த போலீசார் கண்முன்னே அடித்து நொறுக்கினர். மேலும் செங்காடு மலைக்கும் சென்று தாக்கினர்.

போலீஸ் விசாரணை

மேலும் இந்த சம்பவத்தை விசாரிக்க வந்த போலீசாரின் வாகனத்தை கையில் தடிகளுடன் வந்து வழிமறித்து ஊருக்குள் விடாமல் முற்றுகையிட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை ஓடுகத்தூர், அணைக்கட்டு, வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி மயில்வாகனன் தலைமையிலான டிஎஸ்பி நந்தகுமார் முன்னிலையில் போலீசார் சம்பவம் நடைபெற்ற மலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.