காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
“காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்; அவருக்கு கடந்த ஆண்டு 'தகைசால் தமிழர்' விருதினை நான் வழங்கியபோது, என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது குமரி அனந்தன் மறைவால் வாடும் அருமை சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்;
பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசைக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா தமிழிசை சவுந்திரந்திரஜானின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், குமரி அனந்தன் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் மறைவு தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு; தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.