சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான IPL கிரிக்கெட் போட்டி கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை திசைத்திருப்பி, செல்போன்களை வடமாநில கும்பல் திருடிச் சென்றது. செல்போன் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, 20 க்கும் மேற்பட்ட புகார்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவானது.
திருவல்லிக்கேணி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடினர். செல்போன்களை திருடிய ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆகாஷ் நோநியா, விஷால் குமார் மாட்டோ, கோபிந்த் குமார் இவர்களுடன் 4 சிறுவர்கள் உட்பட மொத்தம் 8 நபர்களை கடந்த 1 ம் தேதி வேலூரில் வைத்து திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 8 நபர்களிடமிருந்தும் 38 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த கும்பலின் கூட்டாளிகள் வேலூரில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில், வேலூர் போலீசாரை உஷார் படுத்தி கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர ஷாகினி, ராகுல் குமார், மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோரை கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் வேலூரில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, சென்னை வந்து கிரிக்கெட் மைதானம் அருகே கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் செல்போன்களை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் கடந்த 1 ம் தேதி கைது செய்யப்பட்ட 8 நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடமிருந்து 31 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கைதான 11 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இவர்களில் ராஜ்குமார், ஆகாஷ் நோகியா, விஷால் குமார் மாட்டோ, கோவிந்த் குமார் ஆகிய நான்கு பேர் இந்த கும்பலின் தலைவர்களாக செயல்படுகின்றனர். இந்த கும்பல்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தின்பஹர் கிராமத்தில் இருந்து சிறுவர்களையும் வாலிபர்களையும் திருட்டு தொழிலில் ஈடுபடுத்த தினக்கூலி ரூபாய் 1000 என்ற அடிப்படையில் அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. வரும் நபர்கள் அவர்களது உறவினர்கள் நண்பர்களாக இருப்பார்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் பேருந்து, இரயில் விமானம் மூலம் பயணம் செய்து ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மார்கெட், மால், பீச் மற்றும் கிரிக்கெட் நடக்கும் இடங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவருகிறது.
இதுவரை கைது செய்யப்பட்ட 2 கும்பலில் மொத்தம் 11 நபர்கள் உள்ள நிலையில், அவர்களிடமிருந்து 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் , செல்போன்கள் சென்னை கோயம்பேடு, வடபழனி ஆவடி புரசைவாக்கம் ஐசிஎப், மெரினா கடற்கரை ஆகிய இடங்களிலும் பெங்களூர் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் திருட்டு போனது என தெரிய வருகிறது.
கூட்டமான இடத்தில் இந்த தின்பஹாரியா கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. செல்போன்களை திருடிய பிறகு அவற்றை தின்பஹார் கிராமத்தில் சென்று மாவால்ட் பகுதியில் உள்ள சந்தையிலும் மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச எல்லை பகுதிகளிலும் விற்பனை செய்வதும் தெரிய வருகிறது. இந்த கும்பல் கவனத்தை திசை திருப்பி திருடுதல் மற்றும் பிட்பாக்கெட் ஆகிய தொழில்கள் செய்ய இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களுக்கு பயிற்சி கொடுத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போன்ற கும்பல்கள் எத்தனை பேர் தமிழகத்தில் நுழைந்துள்ளார்கள் என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கும்பல்களில் இதுபோன்று திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பான புகார்களை ஆய்வு செய்து, இந்த கும்பலை சேர்ந்தவர்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே மும்பை அம்பிவாலி பகுதியில் இருந்து செயின் பறிப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டு வாழும் ஈரானிய கொள்ளையர்கள், சென்னையில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கைவரிசை காட்டி விமான மூலம் தப்பிச் செல்லும் போது போலீசார் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் விசாரணையின் போது தப்பிச்செல்லும் போது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தின்பாஹாரிய வட மாநில கும்பல் சென்னைக்குள் நுழைந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு
சேப்பாக்கம் மைதானத்தில் செல்போன்கள் திருட்டு..74 செல்போன்கள் பறிமுதல்.. தின்பாஹாரியா கும்பல் கைது!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை மையமாகக் கொண்டு, வடமாநில தின்பஹாரியா கும்பல் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலின் 11 பேர் கைது செய்யப்பட்டு, 74 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.