தமிழ்நாடு

போராட்டம் வாபஸ்...நாளை முதல் விசைத்தறிகள் இயங்கும்...பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோவையில் 3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 33 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

போராட்டம் வாபஸ்...நாளை முதல் விசைத்தறிகள் இயங்கும்...பேச்சுவார்த்தையில் உடன்பாடு
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு
வேலை நிறுத்த போராட்டம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 2.5 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. சோமனூர், கருமத்தம்பட்டி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 20 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூலை வாங்கி கூலி அடிப்படையில் துணியாக உற்பத்தி செய்து தருகின்றனர். இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் பயன் அடைந்து வருகின்றனர்.

ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி கூலி நிர்ணயக்கப்படுகிறது.இந்த நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2017, 2022 ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காமல் கடந்த 2014ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கூலியை மட்டுமே வழங்கி வருவதாகவும், கூலியை உயர்த்தி வழங்க கோரி கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த மாதம் 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மற்றும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டம் வாபஸ்

கடந்த 33 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகங்களுக்கு 15 சதவீதமும், இதர ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முன் வந்தனர். இதனை ஏற்று விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பின் தலைவர் பூபதி, “நியாயமான கூலி உயர்வு வேண்டி கடந்த 33 நாட்களாக 1.25 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.இதுதொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில், சோமனூர் பகுதி ரகங்களுக்கு 15 சதவீதமும், இதர ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 ஒப்பந்தத்தில் இருந்து இந்த கூலி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

உண்ணாவிரத போராட்டத்தையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். நாளை (இன்று) பொதுக்குழு கூடி வேலை நிறுத்தத்தை விலக்கி கொள்வோம். சுமூக தீர்வு ஏற்படுத்தி தந்த முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார். இதையடுத்து பேசிய அமைச்சர் சாமிநாதன், “ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு வேண்டுகோளை ஏற்று ஜவுளி உற்பத்தியாளர்கள் சோமனூர் ரகங்களுக்கு 15 சதவீதமும், பல்லடம் ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்கள். அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது.

உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் சிறப்பாக தொழில் நடக்க இரு தரப்பினரும் ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளார்கள். ஏதாவது புகார் என்றால், இரு மாவட்ட ஆட்சியர்களும் தீர்த்து வைப்பார்கள்” என தெரிவித்தார்.