தமிழ்நாடு

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சேலம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, காவல் துறை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, துணைவேந்தர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜாமின்... காவல்துறை மனுவிற்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக, பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.

அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர்.

சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்திரேட், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை மனுவுக்கு பதில் அளிக்க துணைவேந்தர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.