தமிழ்நாடு

வாடகைக்கு வீடு வேணுமா சார்? ஸ்கெட்ச் போட்டு கவுத்த பட்டதாரி வாலிபர்!

கோவையில், வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாடகைக்கு வீடு வேணுமா சார்? ஸ்கெட்ச் போட்டு கவுத்த பட்டதாரி வாலிபர்!
coimbatore Online Rental Scam
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நகரங்களுள் ஒன்றான கோவையில் ஏராளமான தொழிற்சாலைகள், ஐ.டி நிறுவனங்கள், உயர் கல்லூரி நிலையங்கள் உள்ளன. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் வேலை பார்ப்பதற்காகவும், கல்லூரியில் படிப்பதற்காகவும் கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக வாடகைக்கு வீடு பார்ப்பவர்களின் எண்ணிக்கை கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இதனை பயன்படுத்தி பட்டதாரி வாலிபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் நீலி கோணம்பாளையத்தை சேர்ந்தவர் பரத் குமார் M.A. ஆங்கிலம் படித்து முடித்துள்ளார். ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணியில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக பதிவிட்டுள்ளார். இவரது பதிவினை நம்பி கோவையில் குறிப்பிட்ட பகுதியில் வீடு தேவை என்று அவரை தொடர்பு கொள்ளும் போது, அந்தப் பகுதியில் காலியாக இருக்கும் வீடுகளை வீடியோ எடுத்து அனுப்பியுள்ளார்.

’இந்த வீடுகளை முன்பதிவு செய்ய பலரும் தயாராக இருக்கிறார்கள், அதனால் ஒரு டோக்கன் அட்வான்ஸை கொடுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என பரத்குமார் தெரிவித்துள்ளார். இதனை நம்பி முன் பணம் செலுத்திய பலரிடம் இருந்து ரூபாய் ஐந்தாயிரம் முதல் ரூபாய் 20 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதுக்குறித்து ஏராளமானவர்கள் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர்கள் தாமரைச்செல்வன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பரத்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 6 வங்கிகளின் கணக்குப் புத்தகம், 6 ஏ.டி.எம் கார்டுகள், 3 சிம் கார்டுகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான பரத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆன்லைனில் இதுப்போல் பலர் வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.