இந்தியா

நிலச்சரிவில் தரைமட்டமான கிராமம்.. 67 பேரை காப்பாற்றிய நாய்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி கிராமத்தில் நாயின் எச்சரிக்கையால் 67 பேர் நிலச்சரிவிலிருந்து உயிர் தப்பியுள்ளனர்.

நிலச்சரிவில் தரைமட்டமான கிராமம்.. 67 பேரை காப்பாற்றிய நாய்
Dog's Bark Saves 67 Lives As Monsoon Wipes Out Village In Himachal's Mandi
இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்குப் பருவமழை காரணமாக இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 50 பேர் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம், மேக வெடிப்பு போன்ற மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில், மாண்டியின் தரம்சலா பகுதியில் பலத்த மழை பெய்து வந்துள்ளது. இந்த நிலையில், நரேந்திரா என்பவரது வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரெனக் குரைக்க தொடங்கியுள்ளது. மேலும், சத்தமாக ஊளையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, நாய் குரைத்த சத்தத்தால் எழுந்த அதன் உரிமையாளர் நரேந்திரா அதிர்ச்சி அடைந்துள்ளார். ​​வீட்டின் சுவரில் ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் உள்ளே நுழையத் தொடங்கியிருந்தது. உடனடியாக அவர் நாயுடன் கீழே ஓடி வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் அவர், கிராமத்தில் உள்ள மற்றவர்களையும் எழுப்பி, பாதுகாப்பான இடத்திற்கு ஓடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கனமழை காரணமாக மக்கள் அனைத்தையும் விட்டுவிட்டுத் கோயில் மற்றும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்தனர்.

சிறிது நேரத்திலேயே, கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு, சுமார் பன்னிரண்டு வீடுகள் தரைமட்டமாகின. தற்போது கிராமத்தில் நான்கு அல்லது ஐந்து வீடுகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ளவை நிலச்சரிவு இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துவிட்டன.

சரியான நேரத்தில் அந்த நாய் குரைத்து உரிமையாளரை எழுப்பியதால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளனர். மேலும் இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.