தமிழ்நாடு

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!

சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!
சமூக வலைதளத்தில் அவதூறு: நடவடிக்கை கோரி வடமாநிலத்தவர் ஆர்ப்பாட்டம்!
சமூக வலைதளத்தில் வட மாநிலத்தவர்கள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுமார் 50க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோட்டூர்புரம் காவல் ஆணையர் அலுவலகத்தின் மூன்றாவது நுழைவு வாயிலில் திரண்ட அவர்கள், கோஷங்களை எழுப்பியபடி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, நுழைவாயில் கதவுகளை மூடினர். இதைத் தொடர்ந்து, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மூவர் மட்டும் புகார் அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

புகார் அளித்துவிட்டு வெளியே வந்த வழக்கறிஞர்கள் சரசமுத்து, மோனிகா, சஞ்சய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில், சமூக வலைதளத்தில் பாலா என்பவர் வட மாநிலத்தவர் மற்றும் குறிப்பாக ராஜஸ்தான் பெண்களை இழிவாகப் பேசியும், ஆபாசமாகவும் திட்டியும் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.

சௌகார்பேட்டையில் உள்ள பாபா ராம்தேவ் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, செல்போனில் மீண்டும் ஆபாசமாகப் பேசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தவர் தென் மாநிலத்தவர் என்ற பிரிவினை இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், பாலாவின் இதுபோன்ற செயல்கள் அந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் உள்ளது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே மறைமலைநகர் காவல் நிலையத்தில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.