தமிழ்நாடு

சென்னையிலிருந்து 560 கி.மீ. தொலைவில் 'மோன்தா' புயல்.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

'மோன்தா' புயல் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து 560 கி.மீ. தொலைவில் 'மோன்தா' புயல்.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
Weather Update
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தப் புயல் தற்போது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. 'மோன்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரணமாக, தமிழகத்தின் 9 துறைமுகங்களில் இன்று 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயலின் தற்போதைய நிலை மற்றும் நகர்வு

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (அக்.26) இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. 'மோன்தா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு-தென்மேற்கிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் தற்போது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

ஆந்திரா அருகே கரையை கடக்கிறது

'மோன்தா' புயல், தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, நாளை (அக். 28) அன்று தீவிர புயலாக ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில், மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மழை வாய்ப்பு மற்றும் எச்சரிக்கை

இந்தப் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், இதன் காரணமாக வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று நவம்பர் 2ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாகியுள்ளதை அடுத்து, தமிழகத்தில் உள்ள சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய ஒன்பது துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.