தமிழ்நாடு

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் பலி.. புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ஷாம். தனது கார் சாவியை கொடுத்து குமரன் நகர் 7-வது தெருவில் நிறுத்தி வைத்துள்ள காரை தூசி படாமல் கவர் போட்டு மூடிவிட கூறி அனுப்பியதாக தெரிகிறது. ஆனால், அந்த சிறுவனோ தன்னுடன் நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு, குமரன் நகர் பிரதான சாலை வழியாக, காரில் ஒரு ரவுண்ட் சுற்றி வருவதற்காக காரை ஓட்டிச் சென்றார்.

இந்நிலையில், வடபழனி குமரன் நகர் 5-வது குறுக்குத் தெரு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரம் நின்ற ஆட்டோ மற்றும் சாலையில் நடந்து சென்ற முதியவர் உட்பட இருவர் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

பின்னர் ஒரு மரத்தின் மீது மோதி கார் நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விரைந்தனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், காயமடைந்தவர்கள் சாலிகிராமம் தனலட்சுமி காலனி வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்த 69 வயது முதியவர் மகாலிங்கம், மற்றும் சாலிகிராமம் நளன் தெருவை சேர்ந்த உணவு விநியோக ஊழியர் கங்காதரன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன், காரில் அமர்ந்து சென்ற அவரது நண்பரான 13 வயது சிறுவன், தந்தை ஷாம் ஆகியோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்துக்கு காரணமான ஷாம்மை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். கார் ஓட்டிய 14 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பரான மற்றொரு சிறுவனை போலீசார் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில் படுகாயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 69 வயது முதியவர் மகாலிங்கம் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுவன் மீது பதியப்பட்டு வழக்குப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.