தமிழ்நாடு

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகிங் கொடுமையால் மாணவன் விபரீத முடிவு...பள்ளியின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

சென்னை சேத்துப்பட்டு குருசாமி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் கிஷோர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை கோபிநாத் பிரபல கார் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உள்ளார். இவரது தாய் நித்தியா மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு கிஷோருடன் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் இருந்து கிஷோர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தாயிடம் சொல்லிக்கொண்டே மாடியில் இருந்து குதித்ததால் மாணவனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவனை சோதித்த போது வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கீழ்பாக்கம் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கிஷோர் உடன் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி மெண்டல், லூசு என்ற வார்த்தைகளைக்கூறி உருவ கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பலமுறை இதுபோன்று கிஷோரை சக மாணவர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவன் கிஷோர் பெற்றோரிடம் தெரிவித்ததால் தாய் நித்யா பள்ளியின் நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார்.

நாளை விடுமுறை என்பதால் நாளை மறுநாள் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கிஷோருடன் தாய் நித்யா வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த கிஷோர் வெளியில் சென்று வர வேண்டும் என தாயிடம் கேட்டுள்ளார். அப்போது வீட்டிலேயே இருக்குமாறு தாய் தெரிவித்ததால் தான் தங்கி இருக்கும் நான்காவது மாடியில் டெரஸ் பகுதியில் கிஷோர் அமர்ந்திருந்துள்ளார்.

மகனை காணவில்லை என தாய் தேடிய போது டெரசில் அமர்ந்திருந்த கிஷோர் தாயிடம் கீழே விழப் போவதாக கூறிக் கொண்டே தற்கொலை செய்துக்கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக மாணவன் உடல் வைக்கப்பட்டுள்ளது.

சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 12-ஆம் வகுப்பு மாணவன் தன் தாய் கண் முன்னே நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இதுதொடர்பாக, போலீசார் ராகிங், உருவ கேலியால் மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக, தற்கொலை வழக்கு என்ற பிரிவின் கீழ் கீழ்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயிரிழந்த மாணவன் கிஷோரின் பெற்றோர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியுள்ளதாவது, தங்களுடைய மகன் வேதனைப்படுவதாக புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் தனது மகன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இன்று மாணவனின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கீழ்ப்பாக்கம் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர்.