விளையாட்டு

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?
ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு: காரணம் என்ன?
தமிழகத்தின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2026-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அவர் மீண்டும் களமிறங்குவாரென ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், இந்தத் திடீர் அறிவிப்பு வெளியானது. தனது யூடியூப் சேனலில், அஸ்வின் தனது இந்த முடிவிற்கான காரணங்களை விளக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

வெளிநாட்டு லீக் போட்டிகளுக்காக ஓய்வு

அஸ்வின் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கான முக்கிய காரணமாக, பிக் பாஷ் லீக் (BBL), எஸ்ஏ20 (SA20) போன்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பைக் குறிப்பிட்டார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வரை வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்க முடியாது என்பதால், அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

மேலும், மூன்று மாதங்கள் நீடிக்கும் ஐபிஎல் போட்டிகள் தனது உடலுக்கு அதிக சுமையை ஏற்படுத்துவதாகவும், தொடர் பயணங்கள் மற்றும் போட்டிகளுக்குப் பிறகு உடலை மீட்டெடுப்பது மிகவும் கடினமானதாகவும் இருப்பதாக அஸ்வின் கூறினார். இந்த உடல்ரீதியான சவால்களால், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதே சரியான முடிவு என்று தான் உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

அஸ்வினின் ஐபிஎல் சாதனைகள்

அஸ்வின் தனது ஐபிஎல் பயணத்தை 2009-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காகத் தொடங்கினார். அதன் பிறகு புனே, பஞ்சாப், டெல்லி, மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடினார். 2025-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்பிய அவர், ₹9.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அவர் இதுவரை 220 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று, 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 883 ரன்கள் எடுத்துள்ளார். 2010 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அஸ்வினின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.