விளையாட்டு

IPL 2025: சென்னையை பந்தாடிய மும்பை.. நாக் அவுட்டாகும் CSK

மும்பை வான்கடோ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 177 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

IPL 2025: சென்னையை பந்தாடிய மும்பை.. நாக் அவுட்டாகும் CSK
IPL 2025: சென்னையை பந்தாடிய மும்பை.. நாக் அவுட்டாகும் CSK
2025 ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் , மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 5 ரன்னில் அவுட்டாகி பெவிலியத்திற்கு திரும்பினார். தொடர்ந்து, ஷேக் ரஷீத் 19 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து தனது 17 வது வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இருக்கும் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 32 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து விளையாடிய ஜடேஜா-ஷிவம் துபே ஜோடி 79 ரன்கள் எடுத்தது. ஷிவம் துபே 4 சிக்ஸர், 2 பவுண்டரி என 32 பந்துகளில் 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 35 பந்துகளில் 53 ரன் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி 6 பந்துகளில் வெறும் 4 ரன் மட்டுமே எடுத்து மீண்டும் ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கினார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். போட்டியை விரைவில் முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதில், ரோகித் சர்மா 33 பந்துகளில் அரை சதம் கடக்க சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் அரைசிதம் எடுத்து அசத்தினார்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவரில் 177 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். தனது சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 6 முறை தோல்வியை தழுவியுள்ளது. இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.