ஐபிஎல் 18-வது சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், 4 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் பேட்டிங் தொடர்ந்து சொதப்பி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. காரணம், 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணியினை அதன் சொந்த மண்ணில் (சென்னையில்) வீழ்த்தியுள்ளது பெங்களூரு அணி.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் தோனி தான் என பலரும் விமர்சித்து வந்தனர். தோனியின் உடல் முன்பு போல் இல்லை. அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை என்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
வதந்தி
நேற்று (ஏப் 5) நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் உடனான ஆட்டம் தான் தோனியின் கடைசி போட்டி என்றும் அந்த ஆட்டம் முடிந்ததும் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் தகவல்கள் பரவி வந்தது. அதற்கு ஏற்றார் போல் தோனியின் பெற்றோர், சகோதரி, மனைவி, மகள் என அனைவரும் போட்டியை காண வந்திருந்தது அதனை உறுதி செய்வது போன்று அமைந்தது. ஆனால், தோனி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஓய்வு குறித்து விளக்கம்
இந்நிலையில், தனது ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் தோனி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “இப்போது நான் ஓய்வு பெறப்போவதில்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடி வருகிறேன். இப்போது எனக்கு 43 வயது ஆகிறது. இந்த சீசன் முடிந்த பிறகு ஜூலை மாதம் வந்தால் 44 வயதாகும். ஐபிஎல் விளையாடுவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்ய இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. நான் விளையாடலாமா? வேண்டாமா? என்பது குறித்து என் உடல் தான் தீர்மானிக்கிறது. என்னவென்று அப்போது பார்க்கலாம்” என்று கூறினார்.
விளையாட்டு
அனைத்தையும் என் உடல் தான் தீர்மானிக்கிறது.. ஓய்வு குறித்து தோனி பதில்
தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பதிலளித்துள்ளார்.