அரசியல்

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மக்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்காதவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நான் சொல்ல முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை- மு.க.ஸ்டாலின் ஆவேசம்
மு.க.ஸ்டாலின் -நரேந்திர மோடி

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த பெண்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “பெண்கள் என்றாலே சாதனை தான். சாதனை என்றாலே பெண்கள் தான் . என்னைப் பொறுத்த வரை இந்த ஆட்சியை மகளிருக்கான ஆட்சி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த கின்னஸ் சாதனையில் 16 ஆயிரம் பெண்கள் கும்மியாடியது பெரிய சாதனையாக அமைந்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது நிருபர்கள் என்னிடம் ஆட்சிக்கு வரப் போகிறீர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல போகிறீர்கள் என கேட்டனர். நான் எதையும் சொல்ல விரும்பவில்லை எனக் கூறி ஒன்றே ஒன்றை மட்டும் கூறினேன். என்னை நம்பி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்கு செலுத்தாதவர்களுக்கும் இந்த ஆட்சி நடைபெறும் எனக் கூறினேன்.

வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் இவருக்கா வாக்கு செலுத்தாமல் போனோம் என வருத்தப்பட வேண்டும். அந்த நிலையில் நிச்சயமாக, எங்கள் ஆட்சி இருக்கும் என உறுதி கூறினேன். அந்த வகையில் தான் இந்த மேற்கு மண்டலத்திற்கும் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-வுக்கு முழுமையான வெற்றி 40-க்கு 40 கிடைத்து இருக்கிறது என்றால் அது இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்.

அதேபோல் வருகிற 2026-ஆம் ஆண்டு நிச்சயம் சொல்கிறேன் நாம்தான் வெற்றிபெற போகிறோம். ஆனால், மோடி தலைமையில் இருக்கக் கூடிய ஒன்றிய அரசு, நமது ஆட்சியைப் போல் இல்லாமல், வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய வஞ்சனையையும் கடந்து தமிழ்நாடு வளர்ச்சியில் எல்லா துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு முறையான நிதிகளை வழங்கி தமிழ்நாட்டிற்கு நன்மையை செய்து கொடுத்தால் உலக அளவில் நாம் தான் முன்னிலையில் இருப்போம்.

இன்று காலையில் கூட தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படாது என்ற உறுதியை பிரதமர் வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து இது பற்றி விவாதித்து இருக்கிறோம். அதற்கு பிறகு வட மாநிலங்கள் மட்டுமில்லாமல் வட மாநிலத்தில் இருந்து ஏழு தலைவர்கள் கொண்ட கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிய பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம்.

ஆனால் இதுவரை ஒப்புதல் வரவில்லை. தமிழ்நாட்டிற்கு வரக் கூடிய நீங்கள் அதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் மக்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்க்கிற வகையில் சென்று உள்ளார். அதனை விளக்காதவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை நான் சொல்ல முடியும். அப்படி நம்முடைய கோரிக்கைகளை தவிர்க்கிறவர்களுக்கு அவர்களை நிச்சயம் தவிர்ப்போம் என்று தமிழக மக்கள் பதில் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.