அரசியல்

மனைவி, மச்சினிக்கு பதவி..! ஏமாற்றப்பட்டாரா விஜய்..? எரிமலையாய் வெடிக்கும் நீலகிரி தவெக..!

த.வெ.க.வின் பூத் கமிட்டி மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி, பெரிய கட்சிகளை மிரளவைக்கப் போவதாக சவால் விட்ட விஜய்யின் கட்சியில், மனைவி, மச்சினிச்சி என கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகிப்புக் குரலை எழுப்பியுள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகிகளால் பனையூரே ஆட்டம் கண்டுள்ளது... இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

மனைவி, மச்சினிக்கு பதவி..! ஏமாற்றப்பட்டாரா விஜய்..? எரிமலையாய் வெடிக்கும் நீலகிரி தவெக..!
மனைவி, மச்சினிக்கு பதவி..! ஏமாற்றப்பட்டாரா விஜய்..? எரிமலையாய் வெடிக்கும் நீலகிரி தவெக..!

சமீபத்தில் நீலகிரி கிழக்கு மாவட்ட த.வெ.க. செயலாளராக பாமா என்பவரை அறிவித்து, தன் கையாலேயே பதவி வழங்கினார் விஜய். இவர், விஜய்யின் மக்கள் இயக்கம், கட்சி ஆகியவற்றின் முன்னணி நிர்வாகியான ரமேஷின் மனைவியாவார். ஒரே குடும்பத்தில் முக்கிய பதவிகளா எனும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக இன்னும் சில நிர்வாகிகளும் தங்கள் மனைவிகளுக்கு அக்கட்சியில் முக்கிய பதவிகளை, வாங்கிக் கொடுக்கவே கொதித்து போயுள்ளனர் நீலகிரி தவெக நிர்வாகிஸ்...

இதுகுறித்து நம்மிடம் பேசிய சில அதிருப்தியாளர்கள், ”விஜய் எங்களுக்கு உயிர் மாதிரி... ஊட்டிக்கு அவர் ஷூட்டிங் வர்றப்பல்லாம் ரோட்ல காத்துக் கிடந்து அவரை சந்திச்சுக் கொண்டாடுவோம். எங்கள் டீமில் ரசிகர்கள் மட்டுமில்லை, ரசிகைகளும் இருக்கிறாங்க. நடுங்கும் குளிரில் அவங்களும் தளபதிக்காக காத்துக் கிடந்து சந்திப்பாங்க... 

ரசிகர் மன்றங்கள் மக்கள் இயக்கமா மாறினப்ப எங்கள் உழைப்பையும், சேமிப்பையும் கொட்டி, தளபதியின் கட்டளைப்படி சேவை பண்ணினோம். அப்புறம் கட்சியாக அவதாரம் எடுத்தப்பவும் எங்களை இணைச்சபடி வெறித்தனமா உழைச்சுட்டு இருக்கோம். தளபதி 'தமிழக வெற்றிக் கழகத்தை அறிவிச்சதிலிருந்து இதோ இப்ப இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வுகள் வரையில் சில லட்சங்களை செலவு பண்ணியிருக்கோம். 

இதுக்கான முறையான அங்கீகாரம் எங்களுக்கு கட்சியில் கிடைச்சிருக்கா?ன்னு கேட்டால் இல்லை” என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டுகின்றனர் நீலகிரி தவெகவினர். 

தொடர்ந்து பேசிய அவர்கள், பலகாலமா பாடுபட்டவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கட்சியின் சார்பு அணியில் சில பதவிகளை வழங்கிட்டு, மெயின் பதவிகளை அவங்க இஷ்டத்துக்கு கபளீகரம் பண்ணியிருக்காங்க சில நிர்வாகிகள் என்ற பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். 

உதாரணத்துக்கு, ”கிழக்கு மாவட்ட செயலாளர் பாமாவுக்கும் தளபதியாரின் மன்றம், இயக்கம், கட்சிக்கும் என்ன சம்பந்தம்? ரமேஷின் மனைவிங்கிறதுக்காக இந்தப் பதவியா? ஆக்சுவலா ரமேஷ் பல வருடங்களா தளபதியின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்தில் எல்லாம் இருந்தார்தான். ஆனால், கொஞ்ச காலத்துக்கு முன்னாடி பெரிய நிதி மோசடி வழக்கில் கைதாகி ஜெயிலுக்குப் போனார். அப்புறம் ரிலீஸாகி வந்தவர் மறுபடியும் தளபதியின் களத்தில் இயங்க ஆரம்பிச்சு, இப்ப தன் மனைவிக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கியிருக்கார். 'நான் மாவட்டத் தலைவர், என் மனைவி மாவட்டச் செயலாளர். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கட்சி வேலை பாருங்க’ன்னு ஓபனாவே சொல்றார். ஆக யாருக்கு பதவி கொடுக்கிறோம்னு தெரியாமலே தளபதியை நிர்வாகம் பண்ண வைக்கிறாங்க” என்று நீலகிரி நிர்வாகிகள் குமுறுகின்றனர்.. 

தொடர்ந்து பேசிய அதிருப்தியாளர்கள், ”நீலகிரி மாவட்டத்துல ஒரு பதினைஞ்சு பேருக்கு பதவிகளை கொடுத்தார் தளபதி. அதிலும் நிறைய தப்புகள் நடந்திருக்குது. கட்சியில் உழைச்சிருக்கிற பஷீருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி, சரி! ஆனா, அவர் மனைவிக்கு மாவட்ட இணைச்செயலாளர் பதவி தரப்பட்டிருக்குது. இதேமாதிரி மாவட்ட பொருளாளர் ராஜேஷோட மனைவிக்கு செயற்குழு உறுப்பினர் பதவி தந்திருக்காங்க. இந்தம்மாவுக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? 

இன்னொரு கொடுமை, நீலகிரி மாவட்டத்தையே சேராத இப்ராஹிம் என்பவர் நீலகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பதவியை தளபதியிடம் வாங்கியிருக்கார். இவரை யாருன்னே நீலகிரி த.வெ.க.வுக்கு தெரியாது. கட்சிக்கு வந்து ஒரு வாரமே ஆன வாணிக்கு தளபதி கையாலேயே செயற்குழு உறுப்பினர் பதவி வாங்கிக் கொடுத்திருக்காங்க” என்று அடுத்தடுத்து பகீர் கிளப்புகின்றனர் நீலகிரி தவெக விசுவாசிகள்...
 
”ஓபனா சொல்றோம், தளபதி விஜய்யின் முகமாக, பிரதிநிதியாக நீலகிரியில் இத்தனை வருஷம் நின்னு உழைச்சது நாங்க. ஆனால் யாருன்னே தெரியாதவங்க இன்னைக்கு த.வெ.க. நிர்வாகிகளா ஆகியிருக்காங்க. அட, பதவி வாங்கின பிறகும்கூட ஒரு கூட்டமோ, நிகழ்ச்சியோ அவங்க நடத்துறதுமில்லை. இந்த கொடுமையை பார்த்துட்டு தளபதியின் நீண்ட கால விசுவாசிகள் த.வெ.க.விலிருந்து விறுவிறுவென விலகத் துவங்கியிருக்காங்க. கட்சி இங்கே கரைஞ்சுட்டு இருக்குது. இதையெல்லாம் மறைச்சு தளபதியாரை இருட்டில் வெச்சிருக்காங்களேன்னு எங்களுக்கு கொதிப்பாகுது” என்று நீலகிரி அதிருப்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுதொடர்பாக, நீலகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் ரமேஷிடம் இந்த விவகாரம் பற்றி பேசியபோது, “இது தற்காலிகமா தளபதியிடம் பேசி, என் மனைவிக்கு இந்த பதவி தரப்பட்டிருக்குது. எனக்கு சின்ன பிரச்னை இருக்கிறதாலே ஒரு மூணு மாசத்துக்கு இப்படி தரச் சொல்லியிருக்கார். தளபதியின் உத்தரவின் பேரில்தான் பண்ணியிருக்கோம். ஆனா எனக்கு வேண்டாத சில பேர் தளபதியின் பெயரைக் கெடுக்கிறதுக்காக இப்படி பிரச்னை கிளப்புறாங்க. மத்தபடி முழுக்க முழுக்க நிர்வாகத்தை என்னைத்தான் தளபதி பார்க்கச் சொல்லியிருக்கார். நிதி மோசடி அதுயிதுன்னு என் மேலே சொல்றதெல்லாம் தப்புங்க. அதெல்லாம் முறையான என் ஓ.சி. வாங்கி க்ளியர் பண்ணியாச்சு. கட்சிக்காக நிறைய செலவு பண்ணிட்டேன். ஆனா பதவியில்லைன்னு சிலர் சொல்லிட்டிருக்காங்க. ஆனா அப்டில்லாம் ஒண்ணும் அவங்க செலவெல்லாம் பண்ணல, எல்லம் பொய் கதைகள். மத்தபடி ஒண்ணும் பிரச்னையில்லை. எல்லாம் க்ளியர் பண்ணிடலாம்" என்றார். 

கட்சிக்கு சம்பந்தமே இல்லாத தங்கள் மனைவிமார்களுக்கு பதவி வாங்கிக் கொடுத்த நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, "உழைச்சோம், கிடைச்சுது. இதுல ஏன் வயிற்றெரிச்சல் படுறாங்க. விவரமில்லாமலா தளபதி பதவி கொடுப்பார்?" என்கின்றனர். 

தலைவர், காதலுக்கு மரியாதை. நிர்வாகிகள் மனைவிக்கு மரியாதை. குட் காம்பினேஷன்!