அரசியல்

விஜய் பிரசாரத்திற்குப் முட்டுக்கட்டை: 19 இடங்களில் அனுமதி மறுப்பு!

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரிய 19 இடங்களுக்குப் புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

விஜய் பிரசாரத்திற்குப் முட்டுக்கட்டை: 19 இடங்களில் அனுமதி மறுப்பு!
TVK Vijay
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கோரிய 19 இடங்களுக்குப் புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தவெக 28 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சி 2 இடங்களிலும் போட்டியிடும் நிலையில், இன்னும் 6 நாட்களே பிரசாரத்திற்கு அவகாசம் உள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய் புதுச்சேரியில் 23 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்

விண்ணப்பித்த 23 இடங்களில் வெறும் 4 இடங்களுக்கு மட்டுமே புதுச்சேரி காவல்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. இந்த 4 இடங்களிலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் 2 மணி நேரத்திற்குள்ளாகப் பிரசாரத்தை முழுமையாக முடித்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொண்டர்கள் ஏமாற்றம்

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஒருமுறை மட்டுமே விஜய் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் மீண்டும் வருவார் என்று தவெக தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது பெரும்பாலான இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், பிரசாரத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.