அரசியல்

"பாஜகவின் கிளைச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி"- முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


CM Stalin & Edappadi Palaniswami
ஈரோடு மாவட்டம் திண்டலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பெரியார் பிறந்த மண்ணில் இருந்து பேசுவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்த அவர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிமுக ஆட்சியின் குறைபாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

ஈரோடு மேற்குத் தொகுதி வேட்பாளர் சு.முத்துசாமி உள்ளிட்ட 9 வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முதலமைச்சர், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி விரைவில் வெளியிடுவார் என அறிவித்தார். கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் புதிய சட்டம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான் இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதையும், 86 சதவீத வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதிமுக மீதான கடுமையான விமர்சனம்

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நேர்ந்த அவமரியாதை போன்ற சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். "அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்குப் பொள்ளாச்சியே சாட்சி" என்று விமர்சித்த அவர், அந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தது திமுக அரசுதான் எனப் பெருமிதம் தெரிவித்தார். தருமபுரி பேருந்து எரிப்பு, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் வரலாறாக அதிமுக ஆட்சி இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

பாஜகவின் கிளைச் செயலாளராக இருக்கும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிகிறது. கால்களில் தவழ்ந்து சென்று, கால்களை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம். ஆனால், திமுகவும் ஸ்டாலினும் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற விடுவதில்லை என நினைத்துக் கொண்டுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.