அரசியல்

விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்.. தவெக-வின் பிரச்சார லோகோ வெளியீடு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்.. தவெக-வின் பிரச்சார லோகோ வெளியீடு!
TVK Releases Campaign Logo
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை (செப்டம்பர் 13) திருச்சியில் இருந்து தனது முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ள நிலையில், அதற்கான லோகோவை கட்சியின் தலைமை இன்று வெளியிட்டது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கட்சித் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் நாளை முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவுள்ளார்.

காவல்துறையின் நிபந்தனைகள்

விஜய்யின் பிரசார சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து மரக்கடையில் பேச அனுமதிக்கப்பட்ட இடம் வரை காருக்குள் இருந்துதான் பயணம் செய்ய வேண்டும், பிரசார வேனில் நின்றபடி பிரசாரம் செய்யக் கூடாது, மீறினால் சுற்றுப் பயணத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளனர். இந்த நிபந்தனைகள் த.வெ.க.வினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பிரச்சார லோகோ வெளியீடு

இந்த நிலையில், த.வெ.க.வின் பிரசார லோகோவை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது. அந்த லோகோவில், "உங்க விஜய் நா வரேன்", "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது", "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.