அரசியல்

நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை- உற்சாக வரவேற்பளிக்க தவெகவினர் ஏற்பாடு

நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.

நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை- உற்சாக வரவேற்பளிக்க தவெகவினர் ஏற்பாடு
தவெக தலைவர் விஜய்
நாகை, திருவாரூரில் தவெக தலைவர் விஜய் இன்று மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, விஜய்யின் பரப்புரை வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என்று தவெக வேண்டுகோள் விடுத்துள்ளது.

விஜய் சுற்றுப்பயணம்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பரப்புரையை தொடங்கினார். தொடர்ந்து அரியலூர் பரப்புரை செய்த அவர் நேரமானதால் பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார்.

ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாததால் விஜய்யின் சுற்றுப்பயண திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி ஒரு நாளில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு நேரமின்மையால் வராததற்கு விஜய் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று (செப்.20) நாகை, திருவாரூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.

தவெகவினருக்கு கட்டுப்பாடுகள்

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகைக்கு செல்கிறார். அதன் பின்னர் காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். அதன்பின்னர் திருவாரூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நாகையில் விஜய்யின் சுற்றுப்பயணத்தையொட்டி விஜய் பேச உள்ள இடங்களில் மட்டும் தவெகவினரின் கோரிக்கையை ஏற்று மின் தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் வருகையால் நாகை மற்றும் திருவாரூரில் தவெகவினர் அதிகளவில் கூடியுள்ளனர். இரு மாவட்டங்களுக்கு வருகை தரும் விஜய்யை உற்சாகமாக வரவேற்க தவெக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விஜய் வருகையின்போது தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.